மேற்கூரை சேதமடைந்துள்ள சீர்காழி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

சீர்காழி, டிச.21: மேற்கூரையில் சிமெண்ட் காரை பெயர்ந்து சேதமடைந்த சீர்காழி சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழியில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியிலிருந்து ஏராளமானவர்கள் பத்திரப்பதிவு, திருமண பதிவு, வில்லங்க சான்று என பல்வேறு சான்றுகள் பெறுவதற்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டிடம் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த அலுவலகத்தின் மேற்பகுதியில் சிமெண்ட் காரைகள் கீழே பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.

 மழைக்காலங்களில் சிதிலமடைந்த கட்டிடத்தின் வழியாக மழைநீர் உள்ளே வருவதால் பொதுமக்கள், ஊழியர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அலுவலக ரெக்கார்டுகளும் சேதம் அடைந்து வருகிறது. கட்டிடத்தின் மேற்கூரையிலிருந்து சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்ததால் சிலர் காயமடைந்தும் உள்ளனர். பழுதடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வருகின்றன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அங்கு பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்களுக்கு தலைக்கு மேல் ஆபத்து காத்திருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன் பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>