×

ஊரைச்சுத்தம் செய்பவர்களின் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் `அவுட்’ அருப்புக்கோட்டையில் அவலம்

அருப்புக்கோட்டை, டிச. 21:  அருப்புக்கோட்டை நகராட்சி தூய்மை பணியாளர்கள் வசிக்கும் காலனியில் அடிப்படை வசதிகள் குறைபட்டால் இங்குள்ளோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அருப்புக்கோட்டை சுக்கில்நத்தம் ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் தூய்மை பணியாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த வீடுகள் கட்டி  பல வருடங்களாகி விட்டன. முறையான பராமரிப்பு இல்லாததால் ஒரு சில வீடுகளில் பதிக்கப்பட்டுள்ள  டைல்ஸ்கள் பெயர்ந்து விட்டது. அறைகளில் பொருத்தப்பட்ட ஜன்னல்களில் உள்ள கண்ணாடி உடைந்து விட்டது. வீடுகளில் உள்ள கழிப்பறைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறும் குழாய்கள் உடைந்து கிடக்கின்றன. இதனால் தூர்நாற்றம் வீசுகிறது. காலனியில் பொதுகுடிநீர் குழாய் உள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு ரோடு போடும் பணியின் போது இந்த குழாயை சேதப்படுத்தி விட்டனர்.

அதன் காரணமாக குழாயில் தண்ணீர் வரவில்லை. இதன் காரணமாக நகராட்சி சார்பில் லாரி மூலம் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. அந்த குடிநீரும் உவர்ப்புத்தன்மையாக உள்ளதால் குடிக்க முடியவில்லை.
இதனால் ஒருகுடம் தண்ணீர் 12 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. நவீன சுகாதார வளாகம் இருந்தும் பயன்பாட்டில்லாமல் பூட்டிக்கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் திறந்தவெளியை நாடுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் புதியதாக 5 வீடுகள் கட்டப்பட்டு பல வருடங்களாகியும் பயன்பாட்டிற்கு வராமல்  சேதமடைந்து நகராட்சி நிதி லட்சக்கணக்கில் வீணடிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 வீடுகள் மட்டும் அடுக்குமாடி குடியிருப்பாகும். இதன் பின் இத்திட்டம் தொடராததால் பல தொழிலாளர்கள் ஓட்டை, உடைசல் ஒட்டு வீடுகளில் பரிதாபமாக வசிக்கின்றனர். நகர் முமுவதும் நாங்கள் தூய்மை பணி செய்கிறோம். ஆனால், எங்களுக்கு அடிப்படைவசதிகள் செய்துதர நகராட்சி நிர்வாகத்திற்கு மனசில்லை. எனவே, ஏற்கனவே கட்டி வழங்கியுள்ள குடியிருப்புகளில் மராமத்து பணிகள் செய்யவும், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நகராட்சி தூய்மை பணியாளர்கள்  வேண்டுகோள் விட்டுள்ளனர்.

Tags : apartment ,Aruppukottai ,
× RELATED திருநெல்வேலியில் சாலை விபத்தில்...