×

10 கிராமங்களில் நெல், மிளகாய் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம் இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

சாயல்குடி. டிச.21: தொடர் மழைக்கு முதுகுளத்தூர் பகுதியிலுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்ட சுமார் 1500 ஏக்கர் நெல், மிளகாய் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. மீண்டும் பயிரிடுவதற்கு அரசு இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். முதுகுளத்தூர் பகுதியில் கடந்த அக்டோபர் மாத கடைசியில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. இந்த வட்டாரத்தில் சுமார் 45 ஆயிரம் ஏக்கரில் நெல், சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் மிளகாய் பயிர்களும்,அடுத்தப்படியாக மல்லி, வெங்காயம், உளுந்து, சோளம், கம்பு, குதிரைவாலி உள்ளிட்டவற்றை பயிரிட்டனர்.

கடந்த நவம்பர் மாதம் முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இரண்டு புயலின் காரணமாக தொடர் மழை பெய்ததால் வயற்காடுகளில் மழை தண்ணீர் தேங்கியது. இதனால் களை எடுத்தல், உரமிடுதல் போன்ற பணிகளை விவசாயிகள் விறுவிறுப்பாக செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 15ம் தேதி முதல் மீண்டும் பருவமழை துவங்கியது. இதனால் முதுகுளத்தூர் அருகே உள்ள திருவரங்கம், செல்லூர், சிறுதலை, வாத்தியனேந்தல், கொளுந்துரை, புதுப்பட்டிணம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி, அழுகி நாசமானது.

இதனை போன்று மைக்கேல்பட்டிணம், மீசல், பொசுக்குடி, பட்டி, அலங்கானூர், தாழியரேந்தல், மட்டியனேந்தல், கடம்போடை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 500 ஏக்கர் மிளகாய் பயிர்கள், சுமார் 50 ஏக்கர் வெங்காயம் பயிர்கள், மல்லி பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. சிறுதலை நெல் விவசாயிகள் ராக்கன், சண்முகம் கூறும்போது, பருவமழையை எதிர்பார்த்து செப்டம்பர் மாதம் உழவார பணிகளை மேற்கொண்டோம். ஆனால் பருவமழை கால தாமதமாக பெய்தது. இதனால் இரண்டாவது முறையாக உழவார பணிகளை செய்தல், களை எடுத்தல், உரமிடுதல் போன்ற பணிகளுக்கு வீட்டிலிருந்த தங்க நகைகளை அடமானம் வைத்தும், வெளியில் வட்டிக்கு வாங்கியும் செலவு செய்து வந்தோம். கதிர்விடும் தருவாயில் தற்போது பெய்த தொடர் மழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகி விட்டது.

இதனால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்பட்டு விட்டது. கடந்தாண்டிற்குரிய பயிர்காப்பீடு இழப்பீடு தொகை இன்னும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த பயிர்களுக்கு காப்பீடு செய்தும், கிடைக்க தாமதமாகும் நிலை உள்ளது. எனவே தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு அரசு பேரிடர் கால இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றனர். மைக்கேல்பட்டிணம் மிளகாய் விவசாயிகள் கூறும்போது. போதிய மழை தண்ணீர் இல்லாத செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் டேங்கரில் விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றி மிளகாய் நாற்றுகளை வளர்த்து வந்தோம். மைக்கேல் பட்டிணம் உட்பட சுற்று வட்டார பகுதியில் சுமார் 500 ஏக்கரில் மிளகாய் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது.

ஊடு பயிராக வெங்காயம், மல்லி பயிரிடப்பட்டுள்ளது. தற்போதைய தொடர் மழையின் காரணமாக மிளகாய் பயிர் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகி விட்டது. இரண்டு மடங்கு செலவு செய்து பயிரிடப்பட்டு, பராமரிக்கப்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது வேதனையாக உள்ளது. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். அரசு உடனடியாக இழப்பீடு வழங்கினால், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் கிடக்கின்ற தண்ணீரை பயன்படுத்தி குறுகிய காலத்தில் மீண்டும் மிளகாய் பயிரிடப்பட்டு விளைவிக்க முடியும் என்றனர்.

Tags : villages ,
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு