சத்துணவு மையத்தில் காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும் ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்

மதுரை, டிச.21: சத்துணவு மைய காலிப்பணியிடங்களை 6  மாதத்திற்குள் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. கூட்டத்தில் நிர்வாகி ஏபிஏ.பாண்டி வரவேற்றார். கூட்டத்தில், 30 ஆண்டுகளுக்கு மேல்  தொடர்ந்து பணியாற்றி ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச  ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு  பணிமூப்பு அடிப்படையிலும், கல்வித்தகுதி அடிப்படையிலும் பதிவுறு எழுத்தர்  மற்றும் அலுவலக உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். 10 ஆண்டு, 20 ஆண்டு  பணி முடித்த சத்துணவு அமைப்பாளர்களுக்கு முறையே தேர்வு நிலை, சிறப்புநிலை  ஊதியமாக 3 சதவீதம் வழங்க வேண்டும். சத்துணவு மைய காலிப்பணியிடங்களை 6  மாதத்திற்குள் நிரப்ப வேண்டும் என்பது உள்பட 10 அம்ச தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

மாநிலத்தலைவராக ரவிதாஸ், மாநில பொதுச்செயலாளராக குப்பம்மாள், மாநில பொருளாளராக குணசேகரன், தலைமைச்செயலாளராக பேச்சிமுத்து உள்பட 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க மாநிலத்தலைவர் குமார், மாவட்டத்தலைவர் ஜெய்கணேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சுப்பையன், முத்துராமலிங்கம், சிவக்குமார் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள்  பங்கேற்றனர். மாவட்டச்செயலாளர் லலிதா நன்றி கூறினார்.

Related Stories:

>