×

குரூப் 1 தேர்வில் காய்ச்சல் பாதித்தவர்களுக்கு தனி அறை ஒதுக்கப்படுமா? தேர்வர்கள் எதிர்பார்ப்பு

பழநி, டிச.21: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வரும் 3ம் தேதி கோட்டாட்சியர், டிஎஸ்பி, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர், மாவட்ட பதிவாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வை நடத்துகிறது. கொரோனா காரணமாக கடந்த மே மாதம் நடைபெற இருந்த இத்தேர்வு தற்போது நடத்தப்பட உள்ளது. மொத்த காலியிடங்கள் 69 ஆகும். சுமார் 2 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எதிர்கொள்ள உள்ளனர்.

கடந்த 13ம் தேதி நடந்த காவலர் தேர்விற்கு சென்ற மாணவர்களின் உடல் வெப்பநிலையை தேர்வு கூடத்தில் பரிசோதித்தபோது சிலருக்கு வெப்பநிலை கூடுதலாக இருப்பதாகக் கூறி தேர்வு கூடத்தை விட்டு வெளியே அனுப்பப்பட்டனர். பல மாதங்களாக தேர்விற்கு தயாரான மாணவர்களுக்கு இது பெரிய ஏமாற்றத்தை உண்டாக்கி உள்ளது. எனவே, குரூப் தேர்விற்கு இதே நிலை ஏற்படாமல் இருக்க காய்ச்சல் பாதித்தவர்களுக்கு தனி அறை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறுகையில், ‘தேர்வு காரணமாக கூட சில மாணவர்களுக்கு தேர்வு நேர காய்ச்சல் வருவது இயல்பு. எனவே, பல வருடங்களாக தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் ஏமாற்றமடைவதை தடுக்க தனி அறை ஒதுக்கி தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்’ என்றார்.

Tags : room ,Group 1 ,examination ,selectors ,
× RELATED 11 மாவட்ட கல்வி அதிகாரி காலி...