×

சின்னக்கல்லார் வழித்தடத்தில் முழு அளவில் பேருந்துகளை இயக்க வேண்டும்

வால்பாறை, டிச.21: வால்பாறையில் அருகே சின்னக்கல்லார் செல்லும் வழியில் புதிய தார்ச்சாலை அமைத்து பேருந்துகள் இயக்காததால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். வால்பாறை ஈட்டியார் எஸ்டேட் வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து தமிழ்நாடு தேயிலைத்தோட்ட கழக (டேன்டீ) சாலை துவங்குகிறது. இப்பகுதியில், சிங்கோனா, 10ம் பாத்தி, டூபைதிரி (2/3), பெரியகல்லார், சின்னக்கல்லார் உள்ளிட்ட அரசிற்கு சொந்தமான எஸ்டேட்கள் உள்ளன.

சமீபத்தில் வால்பாறை பகுதியில் உள்ள தனியார் சாலைகளை, வால்பாறை நகராட்சியால் மேம்படுத்தப்பட்ட நிலையில், அரசு தேயிலைத்தோட்டத்திற்கான சாலைகளை அரசு அதிகாரிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து டேன்டீ சாலையை வால்பாறை நகராட்சி கையகப்படுத்தி புதிய சாலை அமைத்துள்ளது. ஆனால், இந்த வழித்தடத்தில் வழக்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

வால்பாறை டவுனில் இருந்து சின்னக்கல்லார் மற்றும் எஸ்டேட்கள் வனப்பகுதிக்குள் அமைந்து உள்ள நிலையில், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வால்பாறை டவுனிற்கு வந்தாக வேண்டி உள்ளது. பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, வங்கி உள்ளிட்ட பணிகளுக்கு வந்து செல்ல போதிய பேருந்துகள் இல்லை என கூறி நேற்று அரசு போக்குவரத்து கழக மேலாளரிடம் மக்கள் முறையிட்டனர். அத்தியாவசிய பணிகளுக்கு வால்பாறை சென்று வர காலை 8 மணிக்கும், 10.30, 1.30, மாலை 5 மற்றும் 8 மணிக்கு வழக்கமாக வந்த பேருந்துகளை முதற்கட்டமாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினருக்கும் மனு அளித்து உள்ளனர்.

Tags :
× RELATED மாவட்டத்தில் நீண்ட நாட்களாக...