×

கொரோனா விடுமுறை காலங்களில் அரசு பள்ளிகளை பராமரிக்க வேண்டும்

பொள்ளாச்சி, டிச.21: கொரோனா விடுமுறை காலங்களில் பொள்ளாச்சி கோட்டத்திற்குட்பட்ட நகர், கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பொள்ளாச்சி கோட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகாவிற்குட்பட்ட கிராம பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் அதிகம்  செயல்படுகிறது.

துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை என சுமார் 550க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகின்றன. நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் செயல்படும் பள்ளிகளை பராமரிப்பு பணி மேற்கொள்ள, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உரிய நிதியை கொண்டு பள்ளிகளை மராமத்து மேற்கொள்ளுதல், சுற்றுச்சுவர் அமைத்தல், கழிவறை அமைத்தல், கூடுதல் வகுப்பறை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இன்னும் பல அரசு பள்ளிகளில் பராமரிப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

அதிலும், பல துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கழிப்பிட வசதி மற்றும் சுற்றுசுவர் வசதி இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. பல பள்ளிகளில் சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் இருந்தாலும் அதை சரிசெய்ய முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிக்கு என்று ஒதுக்கப்படும் நிதியை கொண்டு, முறையாக பராமரிப்பு பணி மற்றும் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளாமல் இருப்பதாகவும், பழுதான கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்டாமலும், புதர் சூழ்ந்த பகுதியை சீரமைக்கப்படாமல் இருப்பதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கிராம பகுதி மக்கள் கூறுகையில், பொள்ளாச்சி தாலுகாவில் குக்கிராமங்கள் அதிகம் உள்ளன.

இங்குள்ள பல கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் செயல்பட்டாலும், அங்கு தேவைக்கான அடிப்படை வசதியோ, பள்ளியை சீரமைப்பதற்கான கட்டமைப்பு பணியே முறையாக மேற்கொள்ளாமல் இருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது. பல பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லாமலும், சில பள்ளிகளில் இடிந்த சுற்றுச்சுவரை சீரமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கை இல்லாமல் அதிகாரிகள் சுணக்கம் காட்டுகின்றனர்.

இதனால், இரவு நேரத்தில், பள்ளி வளாகத்திற்குள் சமூக விரோதிகள் புகும் அவலம் தொடர்ந்து வருகிறது. சில பள்ளிகளை சுற்றிலும் புதர் சூழ்ந்து இருந்தாலும், மாணவர்கள் நலன்கருதி அதனை அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். தற்போது, கொரோனா விடுமுறை காலத்திலேயே பள்ளிகளை முறையாக பராமரிப்பு மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்’ என்றனர்.

Tags : Corona ,government schools ,holidays ,
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...