ஓராண்டாகியும் ஊராட்சி தலைவருக்கு அதிகாரம் அளிக்கவில்லை

ஊட்டி, டிச. 21: நீலகிரி மாவட்டத்தில் ஊராட்சி தலைவர்களுக்கான அதிகாரம் ஓராண்டாகியும் அளிக்கப்படாமல் உள்ளதாக மாவட்ட ஊராட்சி தலைவர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் 35 ஊராட்சி தலைவர்களுக்கான சிறப்பு கூட்டம் ஊட்டி எச்ஏடிபி பயிற்சி அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் தலைமை வகித்தார். கோத்தகிரி, குன்னூர் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்கு நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் 3 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ஆலோசகர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி தலைவர்களுக்கென தனியாக கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு 5 ஆண்டுகள் அதிகாரிகளே உள்ளாட்சி அமைப்புகளை கவனித்து வந்தனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் பிரதிநிதிகள் இல்லாத போது கடைபிடித்த நடைமுறையையே அதிகாரிகள் தற்போதும் கடைபிடிக்கின்றனர். ஊராட்சி தலைவர்களுக்கு உண்டான அதிகாரங்கள் ஓராண்டாகியும் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கலெக்டரை சந்தித்து வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. மாநில நிதிகுழுவில் இருந்து கடந்த ஓராண்டாக எந்த நிதியும் ஊராட்சிகளுக்கு வழங்கப்படவில்லை. 14வது நிதிக்குழு நிதியும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊராட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை. டெண்டர் முறையில் பணியை நடத்த ஊராட்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அதை இன்னும் நடைமுறைப்படுத்தாமல் உள்ளனர். அதேபோல் நிதிக்குழு நிதியை பயன்படுத்த மத்திய அரசு பல வழிமுறைகளை அறிவித்துள்ளது.

ஆனால் மாவட்ட நிர்வாகம் அதனை வேறு பணிகளுக்கு பயன்படுத்துகிறது. இவை அனைத்தும் களையப்பட வேண்டும். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் உள்ள உரிமைகள் ஊராட்சி தலைவர்களுக்கு வழங்க வேண்டும். இக்கோரிக்கைகள் நிைறவேற்றப்படாத பட்சத்தில் மீண்டும் கூடிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>