×

2 நாள் இடைவெளிக்கு பிறகு புதிய உச்சம் தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுன் ரூ.82 ஆயிரத்தை தொட்டது

சென்னை: தங்கம் விலை இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் நேற்று அதிரடியாக உயர்ந்தது. பவுன் ரூ.82 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சம் கண்டது. தங்கம் விலை கடந்த மாதத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. விலை ஏற்றம் இல்லாத நாளே இல்லை என்ற நிலை நீடித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 29ம் தேதி முதல் தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தை கண்டது. 9ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு பவுன் ரூ.81,200க்கு விற்றது.

இந்நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் விலை மீண்டும் அதிரடி ஏற்றத்தை தொடர்ந்தது. நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,240க்கும், பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு பவுன் ரூ.81,920க்கும் விற்றது. இந்த விலை உயர்வு என்பது தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாகும். தங்கத்தை போலவே வெள்ளி விலையும் நேற்று உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.142க்கும், கிலோவுக்கு 2 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இந்த ஜெட் வேக விலையேற்றம் திருமணம் மற்றும் விசேஷ தினங்களுக்காக நகை வாங்குபவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் தங்கம் விலை உயர தான் வாய்ப்புள்ளது. குறைய வாய்ப்பில்லை என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Tags : Chennai ,
× RELATED டிச.21: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை..!