×

தாமதத்தை தடுக்கும் வகையில் ஆன்லைன் மூலம் பிரேத பரிசோதனை அறிக்கை: தமிழ்நாடு அரசு திட்டம்

சென்னை: ஆன்லைன் மூலம் பிரேத பரிசோதனை அறிக்கை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தற்கொலை, சாலை விபத்து, சந்தேக மரணம், கொலை போன்றவை காரணமாக உயிரிழப்பவர்களின் சடலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னர், உரியவரின் குடும்பத்தினருக்கு அந்த உடல் ஒப்படைக்கப்படுகிறது. இதனை கொண்டு காவல்துறையினரும் சந்தேக மரணங்கள் தொடர்பாக விசாரணையை நடத்துவர். அதேபோல், நீதிமன்றங்களுக்கும் இந்த பிரேத பரிசோதனை அறிக்கை சீல் வைத்து அனுப்பப்படுகிறது. மருத்துவமனை தரப்பில் உடனடியாக தயாராகும் இந்த அறிக்கையானது ஒரு சில நடைமுறை சிக்கல் காரணமாக போலீசாருக்கும், நீதிமன்றத்திற்கு அனுப்புவதில் சிரமங்கள் இருந்து வருகின்றன.

குறிப்பாக, பிரேத அறிக்கையில் மருத்துவர்கள் ஆய்வு செய்வது, கையெழுத்திடுவது போன்ற காரணங்களும் அடங்கும். இதனை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய நடைமுறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி இனிமேல் பிரேத பரிசோதனை அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் உடனே இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம், தாமதம் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சோதனை முறையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதற்காக ஊழியர்களும் பிரத்யேகமாக நியமிக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில்...