×

கீழ் கைகாட்டி பகுதியில் சேதமான வழிகாட்டி பலகை சீரமைக்க வலியுறுத்தல்

ஊட்டி, டிச. 21: ஊட்டி அருகே கீழ்கைகாட்டி பகுதியில் சேதமான வழிகாட்டி பலகையை சீர் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மஞ்சூர் பகுதியில் இருந்து ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிக்கு செல்ல கைகாட்டி வழியாக சாலை உள்ளது. கேரளாவின் மன்னார்காடு, அகழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வர கூடிய சுற்றுலா பயணிகள் மஞ்சூர் வந்து அங்கிருந்து ஊட்டிக்கு செல்ல இச்சாலையை பயன்படுத்துகின்றனர். சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் பொதுமக்களின் வசதிக்காக இச்சாலையில் கீழ் கைகாட்டி பகுதியில் குன்னூர், ஊட்டி சாலைகள் பிரியும் சந்திப்பு பகுதியில் பெரிய அளவில் வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டது.

 இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஊட்டி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மரம் விழுதல், மண்சரிவு உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டன. பல இடங்களில் சாலை சேதமடைந்தது. குடியிருப்பு சேதம், உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. அந்த மழையின் போது கீழ் கைகாட்டி பகுதியில் அமைக்கப்பட்ட வழிகாட்டி பலகையின் மீது ராட்சத மரம் விழுந்து பலத்த சேதமடைந்தது. இதனை சரி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழலில் அந்த வழிகாட்டி பலகை அகற்றப்பட்டு சாலையோரம் வைக்கப்பட்டது.

தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாகிய நிலையில் வழிகாட்டி பலகை சீரமைக்கப்படாமல் சாலையின் இருபுறமும் இரண்டு ராட்சத தூண்கள் மட்டுமே காட்சியளிக்கின்றன. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இந்த வழிகாட்டி பலகையை சீரமைத்து மீண்டும் அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : wrist area ,
× RELATED கூடலூர் அருகே காட்டு யானைகளிடம்...