×

பாரம்பரிய கட்டிடங்கள் சீரமைக்கப்படுமா? எதிர்பார்ப்பு

கோவை, டிச.21: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் 100 ஆண்டிற்கு முந்தைய பாரம்பரியம் மிக்க அரசு மற்றும் அரசு சார்பு அலுவலக கட்டிடங்கள் அதிகளவு உள்ளது. பழங்கால கட்டிடங்களை இடிக்கக்கூடாது, அதனை பராம்பரிய அடையாளமாக பராமரிக்கவேண்டும் என பொதுப்பணித்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக தனி பிரிவு கோவை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கடந்த ஆண்டு துவக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் ஒரு உதவி செயற்பொறியாளர், ஒரு உதவி பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வனத்துறை, சுகாதாரம், குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணி, மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உட்பட பல்வேறு அரசு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பழங்கால கட்டிடங்களை பராமரிக்கும் பணி இந்த பிரிவின் வசம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில், வனத்துறைக்கு சொந்தமான 100 ஆண்டு பழமையான கட்டிடம் திருச்சி ரோட்டில் பழுதடைந்த நிலையில் இருக்கிறது. இந்த கட்டிடத்தின் அருகே 80 ஆண்டு பழமையான நெடுஞ்சாலைத்துறை அலுவலக கட்டிடமும் இடிந்த நிலையில் இருக்கிறது.

பொதுப்பணித்துறை அலுவலகத்தில், 150 ஆண்டு பழமையான கட்டிடமும் சீரமைப்பின்றி காணப்படுகிறது. கோவையில் முதன் முதலில் மில்கள் துவக்கப்பட்ட போது இந்த கட்டிடத்தை பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் பஞ்சு குடோனாக பயன்படுத்தி வந்தனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 90 ஆண்டு பழமையான மாவட்ட கருவூலம் இடிக்கப்படும் நிலையில் இருக்கிறது. பழங்கால கட்டிடங்களை அதன் பாரம்பரிய தன்மை மாறாமல் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பாரம்பரிய கட்டுமான பிரிவினர் திட்டம் தயாரித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் முதல் முறையாக 150 ஆண்டு பழமையான குதிரை வண்டி கோர்ட் சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.

Tags : buildings ,
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...