மன்னார் வளைகுடாவில் மனிதர்களால் மாசடையும் தீவுகள், பவள பாறைகள்: பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

சாயல்குடி, டிச. 18: மன்னார்வளைகுடா கடல் பகுதியில் உள்ள அழகிய தீவுகள், பாதுகாப்பு அரணாக விளங்கும் பவள பாறைகள் மனிதர்களால் தொடர்ந்து மாசமடைந்து வருகிறது. இவற்றை தடுத்து நிறுத்தி பாதுகாக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்திய பெருங்கடலில் லட்சத்தீவுக்கடலின் தென்கிழக்கு முனைக்கும், இலங்கையின் மேற்கு கரைக்கும் இடையேயான சுமார் 100 முதல் 125 மைல் தூர அகல பரப்பிலும், சுமார் 1335 மீட்டர் ஆழ பரப்பிலும் அமைந்துள்ள ஒரு குடா போன்ற இடமானது மன்னார் வளைகுடா என அழைக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 10,500 சதுர கிலோமீட்டர் பரப்பில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம், ராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி, ராமேஸ்வரம் முதல் சாயல்குடி அருகே வேம்பார் (தூத்துக்குடி மாவட்டம்) வரையிலும் அமைந்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் முதன்முறையாக 1974ல் யுனோஸ்காவால் பரிந்துரை செய்யப்பட்டு, மத்திய அரசால் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் அமைக்கப்பட்டது. அதன்பிறகு 1989 முதல் கடல்சார் உயிர்கோள காப்பகம், தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா தேசிய பூங்காவாகவும் விளங்குகிறது.இந்த மன்னார்வளைகுடா கடல் பகுதியில் காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, வான் தீவு, காசுவார் தீவு, ஆனையப்பர் தீவு, உப்புத்தண்ணீர் தீவு, புலுவினிசல்லி தீவு, நல்லத்தண்ணீர் தீவு, தலையாரி தீவு, வாழை தீவு, வாலிமுனை தீவு, அப்பாதீவு, பூவரசன்பட்டி தீவு, முள்ளி தீவு, முசல் தீவு, மனோலிபுட்டி தீவு, மனோலி தீவு, பூமரிச்சான் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடை தீவு, சிங்கில் தீவு ஆகிய 21 குட்டி தீவுகள் அமைந்துள்ளன.

டால்பின், மேலும் கடற்பசு, கடல்ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரியவகை மீன்கள், கடல் தாவரங்கள், கடல்பாசி உள்ளிட்ட உலகத்திலேயே வேறு எங்கும் இல்லாத 3600க்கும் மேற்பட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள், அரிய வகை பவளபாறைகள் உள்ளிட்டவை உள்ளன. மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் அடுத்தப்படியாக தொடர்ச்சியான நீண்ட கடற்கரையாக சாயல்குடி அருகே வாலிநோக்கம், மூக்கையூர், வேம்பார் கடற்கரை விளங்குகிறது. நிலத்திலிருந்து கடல்பகுதியில் சுமார் 3 முதல் 15 நாட்டிக்கல் மைல் தூரத்திற்குள் குட்டி தீவுகள் அமைந்துள்ளன. தூத்துக்குடி குழுவான வேம்பார், வாலிநோக்கம் வரையிலான 7 தீவுகள், கீழக்கரை குழுவில் 7 தீவுகள், மண்டபம் குழுவில் 7 தீவுகளாக உள்ளது.

மிக அருகில் அழகிய பவளபாறைகள் உள்ளன. பவளபாறைகள் பாதுகாப்பு அரணாக இருந்து கடல்சீற்றம் போன்ற இயற்கை பேரிடர்களிலிருந்து கடற்கரையையும், மீனவர்கள், மீனவ கிராமத்தையும் கோட்டை போல் பாதுகாக்கிறது. ஆழமான இக்கடல் பகுதியில் ஆக்ரோஷமாக பேரலைகள் தழுவினாலும் கூட பளவபாறைகள் எவ்வித ஆபத்து இல்லாமல் மீனவர்களுக்கு நண்பர்களாக உதவுகிறது.இப்பகுதியிலுள்ள தீவுகளில் உப்புதன்மை காணப்பட்டாலும், சாயல்குடி அருகே கீழமுந்தல் கடலில் உள்ள நல்ல தண்ணீர் தீவில் சுவையான குடிநீர் கிடைக்கிறது. இங்கு வேம்பு, குட்டை வடிவிலான பனை மரங்கள், தென்னை மரங்கள், பூவரசு, கல்வடோர பெர்சிகா எனும் வகையை சேர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன.

தீவை சுற்றி ஆழமான பகுதி என்பதால், நல்ல மீன்கள் கிடைத்தாலும் தற்போதைய கார்த்திகை, மார்கழி மாதங்களில் டால்பின்கள் குதித்து விளையாடுவது ரம்மியமான காட்சியாக இருக்கிறது. இதேபோல் மயில்கள், கடற்புறா, கொக்கு, பிளம்மிங்கோ வகை கொக்குகள், தீவின் நிலப்பரப்பிலும், வெளியே அரியவகை கடற்பாசிகள், புற்கள், பூச்சிகள் பாம்புகள், கடல் அட்டை, கடல்விசிறி அதிகமாக உள்ளது.இந்த தீவில் முனியப்ப கோயில் ஒன்றும் உள்ளது. இங்கு நேர்த்தி கடனுக்காக நேர்ந்து விடப்படும் சேவல்களும் அதிகமாக உள்ளது. மாவட்டத்திலுள்ள தீவுகளுக்கு செல்ல வனத்துறை, மன்னார்வளைகுடா உயிரின பாதுகாப்பு அலுவலர்களிடம் உரிய அனுமதி பெற்று செல்ல வேண்டும் நிலை உள்ளது.

உரியவர்களிடம் அனுமதி பெற்றும், சிலர் அனுமதி பெறாமலும் பாம்பன் அருகே குருசடை தீவு. கீழக்கரை அருகே அப்பா தீவு, வாழை தீவு. சாயல்குடி அருகே கீழமுந்தல் நல்லதண்ணீர் தீவு உள்ளிட்ட சில தீவுகளுக்கு செல்லும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட அதிகார தோரணையில் வரும் சிலர், விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பொழுதுபோக்கு தளமாக மாற்றி, ஆங்காங்கே உணவு கழிவுகள், பிளாஸ்டிக் கப்புகள், மதுபாட்டில்களை போட்டு விட்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதுடன், தீவுகள் மாசடைந்து, கடலும், பவளபாறைகளும் மாசடைந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

இதேபோல் கடற்கரைகளிலும் பாட்டில்கள், பழைய வலை, பழைய மீன்பிடி சாதனங்கள், மீன், நண்டு, சங்கு கழிவுகள், குப்பைகளால் சுகாதாரகேடு நிலவுகிறது. எனவே மாவட்டத்திலுள்ள கடற்கரை, தீவுகளில் மராமத்து பணிகளை அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, ‘மன்னார்வளைகுடா கடல் ஆழமான கடற்பகுதியாக இருந்தாலும் கூட மீன்வரத்து குறைவாக உள்ளது, இதனால் இப்பகுதியிலுள்ள தீவுகளை கடந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறோம். அப்படி செல்லும் போது, அரசு தடை இருந்த போதிலும், தவறி கூட தீவுகள் அருகிலும், பளவப்பாறைகள் அருகிலும் செல்வது கிடையாது.

இடையூறு, தொந்தரவும் செய்வது கிடையாது. 2005 முதல் பவளபாறைகள் வெட்டி எடுப்பது தடை செய்யப்பட்டது. கடந்த 2004ல் சுனாமி பேரலை வந்தபோது தூத்துக்குடி, ராமநாதபுரம் கடற்கரை மாவட்டங்களை அரணாக இருந்து பாதுகாத்தவை இந்த பவளபாறைகள் தான். தற்போது புரெவி புயல் வந்து ராமேஸ்வரம் பகுதியில் கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தும், பெரியளவில் புயல் வரவில்லை. இத்தகைய பாதுகாப்பு அம்சமாக உள்ள பவளபாறைகள், மனிதர்களால் தொடர்ந்து மாசடைந்து வருகிறது.

குருசடை தீவு, அப்பா தீவு, வாழை தீவு, நல்லதண்ணீர் தீவு பகுதிகள் தூக்கி எரியப்பட்ட உணவுபொருட்கள், பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்து கிடக்கிறது. எனவே கடற்கரை, தீவுகளில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், தீவு உள்ள பகுதிகளில் சோதனை சாவடிகளை அமைத்து, கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும், கடலோர பாதுகாப்பை தீவிரபடுத்த வேண்டும் என்றனர்.

Related Stories:

>