×

நீடாமங்கலத்தில் கோர்ட் உத்தரவுபடி ஆக்கிரமிப்பு வீடுகளைஅகற்றியபோது அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்

நீடாமங்கலம், டிச.18: உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நீடாமங்கலத்தில் ஆக்கிரமிப்பு வீடு அகற்றும் நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம், கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி எழுத்தராக இருந்த நாராயணசாமி என்பவரும், நீடாமங்கலம் பேரூராட்சி எழுத்தராக பணிபுரிந்த சகாபுதீன் என்பவரும் பேரூராட்சிக்கு சொந்தமான கீழராஜவீதியில் வீடுகட்டி குடியிருந்து வாழ்ந்து வந்தனர். இருவருமே இறந்து விட்டனர். தற்போது நாராயணசாமியின் மனைவி லீலாவதி அவரது வீட்டில் வசித்து வருகிறார். மற்றொரு இடத்தில் சகாபுதீன் மகள் ஜலீலாபேகம் (50)என்பவரும் வசித்து வருகிறார். கடந்த 45 வருடங்களாக இருவரது குடும்பத்தினர் வசம் இடம் உள்ளது.

இந்நிலையில் நீடாமங்கலம் தெற்கு வீதியை சேர்ந்த அருட்செல்வன் என்பவர் நீடாமங்கலம் பேரூராட்சி செயல்அலுவலருக்கு ஏற்கனவே கொடுத்த புகாரில் ஜலீலாபேகம்,லீலாவதி ஆகிய இருவரும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனவும் கோரியிருந்தார். நீடாமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆக்கிரமிப்பை அகற்றிடக் கோரி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த இரு குடும்பத்தினரும் குடியிருப்புக்கான ஆதாரங்ளை பேரூராட்சி செயல்அலுவலர், வட்டாட்சியர், திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின்பும் நீடாமங்கலம் பேரூராட்சி செயல்அலுவலர் இருவரது வீட்டை காலிசெய்யும் படி நோட்டீஸ் அனுப்பியிருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் குடியிருப்பை காலி செய்யாத நிலையில் அருட்செல்வன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். வழக்கின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப்போவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற நேற்று காலை தாசில்தார் மதியழகன், போரூராட்சி செயல் அலுவலர்சங்கர் மற்றும் பாதுகாப்பு பணிக்கு மன்னார்குடி டி.எஸ்.பி.இளஞ்செழியன் மேற்பார்வையில் நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையில் போலீசார் தயாராக இருந்தனர்.

இந்த தகவலை அறிந்த லீலாவதி, ஜலீலாபேகம் ஆகியோரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் கூடினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இரு குடியிருப்பு வீடுகளையும் இடிக்கக்கூடாது.குடியிருப்புக்கான மாற்று இடத்தை தேர்வு செய்து கொடுங்கள் என பல்வேறு அரசியல் கட்சியினரும் தொண்டு அமைப்பினரும் தாசில்தாரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்த பேரூராட்சி செயல் அலுவலர் சங்கரிடம் இருவரது ஆதரவாளர்களும் ஆவேசமாக பேசினர். இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டிய இடத்திற்கு அதிகாரிகள் வந்தனர். இரு குடும்பத்தினருக்கும் ஒருவாரம் கால அவகாசம் வழங்கும்படி எழுத்து பூர்வமாக அதிகாரிகளைக் அரசியல் கட்சியினர் கேட்டுக் கொண்டனர். கோரிக்கையை ஏற்ற அரசு அதிகாரிகள் ஒருவாரகாலத்திற்குள் இடத்தை காலி செய்யும்படி லீலாவதி, ஜலீலாபேகம் ஆகியோரை அறிவுறுத்தினர். இதனையடுத்து போலீசார் உள்பட அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் நேற்று காலையில் ஏற்பட்ட பரபரப்பு மாலையில் முடிவுக்கு வந்தது.

Tags : houses ,Needamangalam ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்