×

ஒளிமயமான வாழ்வு முகாமில் 588 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கல்

புதுக்கோட்டை, டிச.18: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் ஏற்கனவே நடைபெற்ற கண் பரிசோதனைக்கான ஒளிமயமான வாழ்வு முகாமில் கண் குறைபாடு கண்டறியப்பட்டவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு இலவச கண்ணாடிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: பொதுமக்களுக்கு கண்களில் ஏற்படும் குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து சரிசெய்யும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் பொதுசுகாதாரத்துறை கண் பரிசோதனைக்கான மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி ஏற்கனவே அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கண் பரிசோதனைக்கான ஒளிமயமான வாழ்வு முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் கலந்து கொண்டவர்களில் கண் கண்ணாடி அணிய வேண்டிய நபர்கள் கண்டறியப்பட்டிருந்தனர். அந்தவகையில் இன்றையதினம் மேலப்பட்டி, இடையப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, புதூர் மற்றும் இராப்பூசல் ஆகிய கிராமங்களில் ஏற்கனவே நடைபெற்ற முகாமில் கண் குறைபாடு கண்டறியப்பட்ட 558 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

விராலிமலை ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கண் பரிசோதனைக்கான ஒளிமயமான வாழ்வு முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விராலிமலை சட்டமன்ற தொகுதியில் எண்ணற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளும் நிறைவேற்ற தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதனை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். இம்முகாமில் பொது சுகாதாரத் துணை இயக்குநர் கலைவாணி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Luminous Life Camp ,
× RELATED திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283...