வண்டி இழுக்க ஆளில்லை திருவெற்றியூருக்கு வேண்டும் பேட்டரி குப்பை வாகனங்கள்

திருவாடானை, டிச. 18: திருவெற்றியூர் ஊராட்சியில் வண்டிகள் இழுக்க ஆட்கள் இல்லாததை காரணம்காட்டி குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே பேட்டரியில் இயங்கும் குப்பை வாகனங்களை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத வன்மீக நாதர் சுவாமி கோயில் உள்ளது. இங்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

மேலும் ராமேஸ்வரம் சுற்றுலா வரும் பக்தர்களும் பாகம்பிரியாள் அம்மனை தரிசித்து செல்கின்றனர். இவர்களின் வியாபாரம் செய்வதற்காக கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் ஓட்டல்கள், டீக்கடைகள், பேன்சி பொருட்கள், தேங்காய், பழக்கடைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இக்கடைகளில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கோயில் அன்னதானத்தில் பக்தர்கள் சாப்பிடும் இலைகள் என அதிகளவி–்ல் குப்பைகள் சேரும், இந்த குப்பைகளை ஊராட்சி நிர்வாக தூய்மை பணியாளர்கள் தள்ளுவண்டியில் அள்ளி, 2 கிமீ தொலைவில் கொட்டி வருகின்றனர். இங்குள்ள தூய்மை பணியாளர்களில் சிலர் பெண்கள், சிலர் வயதானவர்களாக இருப்பதால் சிலநேரம் வண்டியை இழுக்க ஆளில்லாத நிலையில் கோயிலுக்கு அருகிலேயே கொட்டி விடுகின்றனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருவெற்றியூர் பகுதி மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் குப்பை வண்டிகளை இழுக்க போதிய ஆட்கள் கிடைக்கவில்லை. இதனால் சேரும் குப்பைகளை அங்கேயே கொட்டி தீ வைத்து கொளுத்துகின்றனர். இதில் ஏற்படும் புகையால் குடியிருப்புவாசிகள், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் சிறப்பு நிதி ஒதுக்கி பேட்டரியால் இயங்கும் குப்பை வண்டியை வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>