×

தமுக்கத்தில் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு கொட்டும் மழையில் மக்கள் போராட்டம்: பணிகளை நிறுத்திய அதிகாரிகள்

மதுரை, டிச.18:  மதுரை தல்லாகுளம் திடலில் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் முன்பு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் திடல் உள்ளது. இந்த திடல் 1906ம் ஆண்டு பொது பயன்பாட்டிற்கு என தெருவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் இந்த இடத்தில் பழக்கடைகள் நடத்த வணிக வளாகமாக கட்ட கோயில் நிர்வாகத்தினர், தோட்டக்கலை துறைக்கு அனுமதி வழங்கினர்.

அழகர் ஆற்றில் இறங்கும் போது இந்த திடலில் எதிர்சேவை, பூப்பல்லக்கு போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும். அப்போது வெளிமாவட்டத்தில் இருந்து வரும் பலாயிரக்கணக்கான  பக்தர்கள் இந்த திடலில் திரண்டு தரிசிப்பர். இந்நிலையில் அந்த இடத்தில், வணிக வளாகம் கட்டினால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும். மேலும் பொதுமக்களின் பயன்பாடும் தடுக்கப்படும். எனவே வணிக வளாகம் கட்டக்கூடாது எனக் கோரி, தல்லாகுளம் கிராமம் மக்கள் நல கமிட்டி அமைக்கப்பட்டு, அதன் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஐகோர்ட் கிளையில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இடத்தை அளக்க கோயில் நிர்வாகம், தோட்டக்கலை துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை வந்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு கொட்டும் மழையில் திடலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தாசில்தார் முத்துவிஜயன் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போதைய சூழ்நிலையில் இந்த பணியை நிறுத்துவது எனவும், தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags : Protests ,shopping mall ,
× RELATED போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க கோரி...