×

கனியாமூர் தனியார் பள்ளி கலவரத்தில் போலீஸ் மீது கல்வீசி தாக்கிய வழக்கில் 89 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்

கள்ளக்குறிச்சி, செப். 11: கனியாமூர் தனியார் பள்ளி கலவரத்தில் போலீஸ் மீது கல்வீசி தாக்கிய விவகார வழக்கு விசாரணை டிசம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்2 படித்து வந்த மாணவி மதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம்தேதி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதனையடுத்து அப்பள்ளி வளாகத்தில் இவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது. இந்த கலவரத்தின்போது பள்ளி சூறையாடப்பட்டதோடு பள்ளி வாகனங்கள் மற்றும் போலீஸ் வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் பள்ளி வளாகத்தில் பொருட்களை சூறையாடி திருடியது, காவல்துறை வாகனத்திற்கு தீவைத்தது, பசு மாடுகளை துன்புறுத்தியது, காவல்துறை உயர் அதிகாரிகள் உள்பட போலீஸ் மீது கல்வீசி தாக்கியது என மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 3 வழக்குகளில் 53 சிறார்கள் உள்பட மொத்தம் 916 பேர் மீது 41 ஆயிரத்து 250 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தாக்கல் செய்தனர். இதில் காவல்துறை வாகனத்தை தீ வைத்து எரித்த மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கல்வீசி தாக்கிய வழக்கு விசாரணை நேற்று வந்தது. இந்த வழக்கில் 119 பேரில் 3 பேர் இறந்துவிட்டனர். இதில் 89 பேர் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2 ல் நீதிபதி ரீனா முன்னிலையில் ஆஜராகினர். மீதமுள்ள 27 பேர் பல்வேறு காரணங்களால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 10ம்தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Talakurichi court ,Kanyamur ,KALLAKURICHI ,Akvarveji ,KANYAMUR PRIVATE SCHOOL HOSTEL ,KALLAKURICHI DISTRICT SINNSALAM ,
× RELATED ஓய்வூதியர் தின விழா