×

கால்வாயை சுருக்கி சாலை அமைத்ததால் மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியை சூழ்ந்தது: தாம்பரம் மக்கள் தவிப்பு

தாம்பரம், டிச.18: தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. கால்வாய்களை சுருக்கி, சாலை அமைக்கப்பட்டதே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு கனமழை பெய்ததால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக, கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரத்தை இணைக்கும் சுரங்கப்பாதை மூழ்கியது. தாம்பரம் நகராட்சி 24வது வார்டில் சுத்தானந்த பாரதி தெரு, செந்தமிழ் சேதுபிள்ளை தெரு, பரலி நெல்லையப்பர் தெரு, மகாலட்சுமி தெரு ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.
சில பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர். இங்குள்ள மழைநீர் கால்வாய் அகலத்தை குறைத்து, சாலைகளை விரிவுபடுத்தியதால்தான் மழைநீர் வெளியேற முடியாமல், வீடுகளை சூழ்ந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு மழையின்போதும் இப்பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கிறது. கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரத்தை இணைக்கும் சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றும்போது, அது மேற்கண்ட தெருக்களில் உள்ள கால்வாய் மூலமாக, கணபதிபுரம் அருகேயுள்ள நல்லேரியை சென்றடைந்தது. இந்த கால்வாயின் அகலத்தை கடந்த சில வருடங்களுக்கு முன் நகராட்சி அதிகாரிகள் சுருக்கி, சாலையாக மாற்றிவிட்டனர். இதனால், தற்போது மழைநீர் வெளியேற வழியின்றி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் தேங்கிய மழைநீரை அகற்ற இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் மேற்கண்ட பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது,’’ என்றனர்.

Tags : road ,area ,Tambaram ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...