கடன் தொல்லையால்பட்டறை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி, டிச.18: ஆவடி அருகே அயப்பாக்கத்தில் கடன் தொல்லையால் பட்டறை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி அடுத்த அயப்பாக்கம், லோட்டஸ் அவின்யூவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (36). இவர் கொரட்டூரில் பட்டறை நடத்தி வந்தார். இவரது மனைவி கார்த்திகா (30) இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இதற்கிடையில் ஆனந்தராஜுக்கு கடன் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால், தம்பதியருக்கு இடையே குடும்ப பிரச்சனையும் இருந்து வந்துள்ளது.

மேலும், ஆனந்தராஜ் மது அருந்தி விட்டு, அடிக்கடி தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆனந்தராஜ், குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், தனது நண்பருக்கு போன் செய்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டி உள்ளார்.  அவரும் வீட்டுக்கு விரைந்து வந்துள்ளார். அதற்குள் ஆனந்தராஜ், தனது செல்போனை கார்த்திகாவிடம் கொடுத்து விட்டு, வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர், தூக்கில் தொங்கிய அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆனந்தராஜ் வரும் வழியிலே இறந்ததாக தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories:

>