×

கொரோனா தடுப்பு விதிமுறையை பின்பற்றி ஊட்டி எச்ஏடிபி மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி

ஊட்டி, டிச. 18: ஊட்டியில் உள்ள எச்ஏடிபி விளையாட்டு மைதானத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் கூடைப்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் போன்றவற்றிற்கு தனித்தனி மைதானங்கள் உள்ளன. இதுதவிர கால்பந்து, ஹாக்கி உள்ளிட்டவைகள் விளையாட பெரிய புல்மைதானம் உள்ளது. இம்மைதானத்தில் தடகள ஓடுதளம், சிந்தெட்டிக் ஓடுதளமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. குளிர் பிரதேசம் என்பதால் ஆக்ஸிஜன் அளவு சற்று குறைவாக இருக்கும்.  இதுபோன்ற ஹை ஆல்டிடியூட் பயிற்சி மேற்கொள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் இங்கு வந்து பயிற்சி மேற்கொண்டு செல்கின்றனர். இந்த சூழலில் கொரோனா ஊரடங்கு காரணமாக விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் அளிக்கப்பட்ட தளர்வுகளின் போது விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் காரணமாக கூடைப்பந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி மேற்கொள்வதற்காக 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்து, அந்த நேரத்தில் மட்டும் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.இதுதவிர புனேவில் உள்ள ராணுவ விளையாட்டு மையத்தை சேர்ந்த 12 தடகள வீரர்கள், ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகளில் பங்கேற்கும் பொருட்டு ஊட்டியில் தங்கி எச்ஏடிபி மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  இவர்கள் ெகாரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடித்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

Tags : Athletes ,ground ,Ooty ,HATP ,
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்