இது இடப்பெயர்ச்சி காலம் யானைகள் ‘ஜாலி வாக்’; பொதுமக்கள் ஷாக்..!

கோவை, டிச.18: கோவை மாவட்டத்தில் 627 சதுர கி.மீ. பரப்பில் வனப்பகுதி இருக்கிறது. இங்கே 461 யானைகள் வசிப்பதாக தெரிகிறது. யானைகளின் இடப்பெயர்ச்சி தற்போது அதிகமாகி விட்டது. 7 வன சரகங்களில் யானைகள், தங்களது வசிப்பிடத்தை மாற்றி வேறு பகுதியை நோக்கி செல்வதாக தெரியவந்தது. யானைகளின் இடப்பெயர்ச்சியால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. பன்னிமடை பகுதியில் 63 வயதான கூலி தொழிலாளி யானை மிதித்து இறந்தார். வனத்துறையினர் அங்கே சென்றபோது 20 யானைகள் ஒரே இடத்தில் கூட்டமாக நின்றது. இது வனத்துறையினரை அதிர்ச்சியடைய செய்தது. 3 நாளுக்கு முன் தொண்டாமுத்தூர் பகுதியில் டீக்கடைக்கு சென்ற முதியவர் ஒருவரை யானை தும்பிக்கையால் தூக்கி வீசி கொன்றது. மேலும் 2 வாலிபர்களை விரட்டி சென்று தாக்கியது. கடந்த சில நாட்களாக மதுக்கரை, கரடிமடை, தொண்டாமுத்தூர், நரசீபுரம், மாங்கரை உட்பட 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. யானைகளின் இடப்பெயர்ச்சியால் வன கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். வன எல்லையோர கிராமங்களுக்கு வனத்துறை சார்பில் அபாய எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.

பன்னிமடை கிராமமக்கள் கூறுகையில், ‘‘யானைகள் கூட்டமாக சுற்றுகின்றன. வீட்டு வாசல் படியில் நின்று கதவை தட்டுகின்றன. என்ன செய்வது? என தெரியாமல் தவிக்கிறோம். வனத்துறையினர் யானைகளை கண்காணிப்பதில் அலட்சியமாக இருக்கின்றனர். கிராமங்களுக்கு 20க்கும் மேற்பட்ட யானைகள் வருகின்றன. வீட்டில் இருந்தாலும், வெளிேய சென்றாலும் அபாயத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது. எங்கள் ஏரியா மட்டுமின்றி மேலும் பல பகுதிகளிலும் யானைகள் நடமாட்டம் இருக்கிறது. யானைகள் வருவது வழக்கம்தான், நீங்கள்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என வனத்துறையினர் கூறுகின்றனர்’’ என்றனர். கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், ‘‘நாங்கள் அபாய எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்ட பகுதியில் அத்துமீறி சென்ற முதியவர் யானை தாக்கி இறந்து விட்டார்.  யானைகள் இடப்பெயர்ச்சி இந்த சீசனில் அதிகமாக இருக்கிறது. வரும் ஜனவரி வரை இப்படித்தான் இருக்கும். யானைகள் வன எல்லைப்பகுதியில் அதிகமாக வந்து செல்ல வாய்ப்புள்ளது. நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடந்த காலங்களில் யானைகள் இடப்பெயர்ச்சி அதிகமாக இருந்துள்ளது.

பொதுமக்கள் வனத்துறை அறிவிப்பை மதித்து நடக்கவேண்டும். யானை நடமாட்டம் இருக்கிறது, போக வேண்டாம் என கூறினால் அங்கே செல்லக்கூடாது. யானையை பற்றி பயம் இல்லாமல் சிலர் துணிச்சலாக செல்கிறார்கள். அபாய பகுதி என தெரிந்தும் செல்வது சரியல்ல. பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படவேண்டும். வனத்துறை சார்பில் இடம்பெயரும் யானைகளை கண்காணிக்கும் பணி நடக்கிறது’’ என்றார்.

Related Stories:

>