×

கேமரா எல்லாம் சும்மா... நகையை அள்ளுது ‘ஸ்நேச்சிங்’ கும்பல்

கோவை, டிச.18: கோவை நகரில் நகை பறிப்பு, பிக்பாக்கெட், வழிப்பறி அதிகமாகி விட்டது. வீதிக்கு ஒரு கேமரா கட்டாயம் என்ற திட்டத்தை செயலாக்க நகர போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். வணிக பகுதியில் குறிப்பாக ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, தியாகி குமரன் வீதி, கிராஸ்கட் ரோடு, டி.பி. ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபார கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பரலவாக அமைக்கப்பட்டிருக்கிறது.
 90 சதவீதம் கடைகளில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. போலீசார் அடுக்குமாடிகளை கணக்கெடுத்து அங்கே கண்காணிப்பு கேமரா அமைக்க வலியுறுத்தி வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ நிகழ்ச்சியில் நடக்கும்போது  பொதுமக்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விடுகிறார்கள். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் திருடர்கள் வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டுகிறார்கள். 90 சதவீத திருட்டுகள் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் நடப்பதாகவும், 70 சதவீத திருட்டுகள் இரவு நேரத்தில் நடப்பதாகவும் தெரியவந்துள்ளது. நகரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அபார்ட்மென்ட் அமைந்துள்ளன. அனைத்து அபார்ட்மென்டுகளிலும் கேமரா பொருத்தப்பட்டு அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறை மூலமாகவும், அபார்ட்மென்ட் கேமராக்களின் பதிவுகளை காணவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விடுமுறையில் வெளியூர் செல்பவர்கள், சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எந்த தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பூட்டிய வீடுகளை கண்காணிக்க ரோந்து போலீசாருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் வீடு பூட்டப்பட்ட விவரங்களை போலீசாருக்கு தெரிவிக்க தயங்குவதாக கூறப்படுகிறது. இதனால்தான் இரவு நேர திருட்டுகளை தடுப்பதில் சிக்கல் இருப்பதாக தெரிகிறது. பொது இடங்களில், கண்காணிப்பு கேமரா உள்ள இடங்களில் கூட நகை பறிப்பு திருடர்கள் சுற்றுகிறார்கள். நகை பறிப்பு கும்பல் போலியான வாகன பதிவு எண் உள்ள வாகனங்களில் வலம் வருகின்றனர். இவர்கள் ஹெல்மெட் அணிந்திருப்பதால் அடையாளம் காண முடிவதில்லை.  கேமரா பதிவை வைத்து திருடர்களை பிடிப்பது சவாலாகி விட்டது என குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். நகை திருடி தப்பிக்க ‘ஹை ஸ்பீடு’ பைக்குகளை திருடர்கள் பயன்படுத்துவதாக தெரிகிறது. நன்றாக பைக் ஓட்ட தெரிந்தவரை  பைக்கை நிறுத்தி தயாராக வைத்துவிட்டு, மற்றொருவர் திருடுவதாக தெரியவந்துள்ளது. செயின் பறிப்பில் புதிய திருடர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : gang ,
× RELATED இந்தியா கூட்டணி வென்றால் தான் நாட்டை...