×

9 மாதங்களுக்கு பிறகு புதுவையில் கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு மழையிலும் மாணவர்கள் ஆர்வம்

புதுச்சேரி, டிச. 18: புதுவையில் 9 மாதங்களுக்கு பிறகு கலை, அறிவியல் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. மழையையும் பொருட்படுத்தாமல் இறுதியாண்டு மாணவர்கள் ஆர்வமுடன் கல்லூரிக்கு வந்திருந்தனர். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 23ம்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலானது. இதில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தற்போது சகஜ வாழ்க்கை திரும்பியுள்ளது. 9 முதல் பிளஸ்2 வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் முதல் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஊரடங்கின்போது மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை முழுமையாக திறக்கப்படாமல் உள்ளன. தமிழகத்தில் கடந்த 7ம்தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செயல்படத் தொடங்கின.

இந்த நிலையில் புதுச்சேரியில் 9 மாதங்களுக்குபின் அரசு, தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. இளங்கலை, முதுகலை, இறுதியாண்டு வகுப்புகளும், ஆராய்ச்சி படிப்புகளும் 9 மாதங்களுக்குபின் செயல்படத் தொடங்கின. நீண்ட நாட்களுக்குபின்பு கனமழையையும் பொருட்படுத்தாமல் கல்லூரிக்கு மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் வந்திருந்தனர். அவர்களுக்கு கல்லூரி நுழைவு வாயிலில் சானிடைசர் வழங்கப்பட்டது. முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க அறிவுறுத்தப்பட்டு சமூக இடைவெளிவிட்டு அமர வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றன. இதற்காக ஒவ்வொரு பிரிவிலும் இடம்பெற்றிருந்த மாணவர்கள் 2 ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டு ஒரு நாளைக்கு 50 சதவீத மாணவர்கள் மட்டுமே வரவழைக்கப்பட்டு இருந்தனர். ஒருநாள் விட்டு ஒருநாள் கல்லூரிக்கு அவர்கள் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : showers ,colleges ,New Delhi ,
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...