மீனவர் வலையில் சிக்கிய ஆளில்லா விமானம் புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி, டிச. 18:  புதுச்சேரி மீனவர் வலையில் சிறிய ரக ஆளில்லா விமானம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி  சோலைநகரை சேர்ந்தவர் சுதாகரன் என்கிற நாகேந்திரன். இவர் நேற்று முன்தினம் மாலை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 6 பேர் கொண்ட குழுவினருடன் விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றார்.  நடுக்கடலில் மீன்பிடித்து  கொண்டிருந்தபோது, வலையில் ஒரு மர்ம பொருள் சிக்கியது. அதனை மீனவர்கள்  போராடி கரைக்கு கொண்டு வந்துபார்த்தபோது, ஆளில்லா சிறிய விமானம் என தெரியவந்தது.  இதுகுறித்து மரைன் போலீஸ் எஸ்பி பாலச்சந்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து  மீனவர்களிடம் சிக்கிய  சிறிய ரக விமானத்தை கைப்பற்றினர்.இந்த ஆள் இல்லா விமானம் குறித்து மரைன் போலீசார் கூறுகையில், மீனவர்  வலையில் சிக்கிய ஆளில்லா விமானம் இந்திய விமானப்படைக்கு சொந்தமானது. இதனை ரேடார் உதவியுடன் தரையிலிருந்தும், கப்பலில் இருந்தும், விமானத்தில் இருந்தும், ஏவலாம்.இலக்கை குறி வைத்து விமானப்படை  பயிற்சிக்காக பயன்படுத்துவது வழக்கம்.

23 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும், 200 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று  இலக்கை திட்டமிட்டு சென்றடைகிறதா? என்பதற்காக அவ்வப்போது பரிசோதனை  செய்யப்படும். இந்திய ராணுவம் மட்டுமல்லாமல் அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து நாடுகளிலும் பயிற்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்திய ராணுவ பயிற்சியின்போது இந்த ஆளில்லா விமானம்  கடலில் விழுந்துள்ளது. இப்படி கடலில்  விமானம் விழும்போது சில நேரங்களில் இதனை மீட்பார்கள். தேடிப்பார்த்து கிடைக்காவிட்டால்  அப்படியே விட்டுவிடுவார்கள். இவ்வாறு கைவிடப்பட்ட இந்த சிறிய ரக விமானம்  தான் மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளது. இதுகுறித்து விமானப்படைக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றனர்.மீனவர் வலையில் சிறிய ரக விமானம் கிடைத்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>