×

ஆரணி அருகே பரபரப்பு விவசாய நிலம் வழியாக சடலம் எடுத்து செல்ல எதிர்ப்பு இளம்பெண் மண்டை உடைப்பு

ஆரணி, டிச.18: ஆரணி அருகே விவசாய நிலம் வழியாக சடலம் எதிர்ப்பு தெரிவித்த தகராறில் இளம்பெண்ணின் மண்டை உடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மட்டதாரி ஊராட்சி மைனந்தல் கிராமத்தில் இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய 2 கி.மீ. தொலைவில் சுடுகாடு உள்ளது. சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் அங்குள்ள விவசாய நிலங்கள் வழியாக சடலத்தை எடுத்து செல்லும் நிலை உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், பாதை அமைக்கவில்லை. இந்நிலையில், மைனந்தல் கிராமத்தை சேர்ந்த மோகன் மனைவி சுதா(39) என்பவர் உடல் நலக்குறைவால் நேற்று இறந்தார். அவரது சடலத்தை சவுந்தரராஜன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் வழியாக எடுத்து சென்றனர்.

அப்போது, அங்கு வந்த சவுந்தரராஜனின் உறவினர் பிரகாஷ்(26) என்பவர், சடலத்தை நிலத்தின் வழியாக எடுத்து செல்லக்கூடாது என்றார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரகாஷ், இறந்த சுதாவின் தங்கை சுபத்ரா என்பவரை கட்டையால் தாக்கியதில் அவரது மண்டை உடைந்தது. மயங்கி விழுந்த அவரை எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதனால் அவரது உறவினர்கள் சடலத்தை நிலத்தில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்தனர். பின்னர், ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Arani ,farmland ,
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...