×

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலான கனமழை சாத்தனூர் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது சேத்துப்பட்டில் அதிகபட்சமாக 76 மி.மீ மழை பதிவு

திருவண்ணாமலை, டிச.18: திருவண்ணாமலை மாவட்டத்தில், பரவலான கனமழை பெய்தது. சேத்துப்பட்டில் அதிகபட்சமாக 76.40 மி.மீ மழை பதிவானது. தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் தாக்கம் படிப்படியாக குறைந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் பரவலான கனமழை தொடங்கியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய கனமழை பெய்தது. நேற்று பகல் முழுவதும் பரவலான மழை பெய்தது.
அதிகபட்சமாக, சேத்துப்பட்டில் 76.40 மிமீ மழை பதிவானது. திருவண்ணாமலை 20 மிமீ, ஆரணி 31.80 மிமீ, செய்யாறு 29 மிமீ, செங்கம் 6.80 மிமீ, ஜமுனாமரத்தூர் 6 மிமீ, வந்தவாசி 18.20 மிமீ, போளூர் 15.40 மிமீ, தண்டராம்பட்டு 50 மிமீ, கீழ்பென்னாத்தூர் 49 மிமீ, வெம்பாக்கம் 30 மிமீ மழை பதிவானது. தொடர்ந்து பெய்யும் மழையால், ஏரிகள், குளங்கள், பாசன கிணறுகள் நிரம்பி வருகின்றன. நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. ஏற்கனவே பெய்த கனமழையால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடியான நெற்பயிர் சேதமடைந்தன.

விளை நிலங்களில் இருந்து மழை வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில், மீண்டும் மழை நீடித்திருப்பது விவசாயிகளை கவலையடைய ெசய்திருக்கிறது. மழை வெள்ளத்தால் நீர்நிலைகள் நிரம்புவது மகிழ்ச்சியளித்தாலும், தொடர் மழையால் ஏற்படும் பயிர் சேதத்தால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 243 கனஅடி தணணீர் வந்துகொண்டிருக்கிறது. எனவே, அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில், தற்போது 98.75 அடி நிரம்பியிருக்கிறது. நாளைக்குள் 100 அடியை தொட்டுவிடும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 41.98 அடியாகவும், மிருகண்டா அணையின் நீர்மட்டம் 20.01 அடியாகவும், செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 58.02 அடியாகவும் உயர்ந்திருக்கிறது. செண்பகத்தோப்பு அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் ஆற்றின் வழியாக வெளியேற்றப்படுகிறது. அதன்படி, தற்போது வினாடிக்கு 50 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags : Thiruvannamalai district ,Sathanur Dam ,Chetput ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...