×

ஆண்டிபட்டி பகுதிக்கு முல்லை பெரியாறு நீர் கோரி வாயில் கருப்பு துணி கட்டி ஊர்வலம்

ஆண்டிபட்டி, டிச. 17: ஆண்டிபட்டி பகுதிக்கு முல்லை பெரியாறு நீரை கொண்டு வர கோரி விவசாய சங்கத்தினர் வாயில் கருப்பு துணி கட்டி ஊர்வலம் சென்றனர். தேனி மாவட்டத்தின் வறட்சி பகுதியான ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகளில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. மாவட்டத்தில் பாய்ந்து வரும் வைகை, முல்லை பெரியாறுகளினால் இப்பகுதிக்கு எந்த பயனும் இல்லை. மேடான பகுதியாக இருப்பதால் இங்கு நிலத்தடி நீரும் 1500 அடிக்கும் கீழே சென்று விட்டது. கடந்த 2 மாதங்களாக மழை பெய்தும், இப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கண்மாய்களும் வறண்டு காணப்படுகிறது.

இதன்காரணமாக முல்லை பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரை குழாய் மூலம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்திற்கு எடுத்து வந்து கண்மாய்களை நிரப்ப வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்த திட்டம் இன்னும் பேப்பர் அளவிலேயே உள்ளது.இந்நிலையில், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக முல்லை பெரியாறு உபரிநீரை குழாய் மூலம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்திற்கு கொண்டு வரும் திட்டத்தினை செயல்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று தமிழக மலர்- அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அடையாள ஊர்வலம் நடைபெற்றது.

வாயில் கருப்புத்துணி கட்டியபடி விவசாயிகள், ஆண்டிப்பட்டியில் இருந்து ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்றனர். தொடர்ந்து இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர். வரும் சட்டமனற தேர்தலுக்குள் இந்த திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், அடுத்தகட்டமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Mullaperiyar ,procession ,area ,Andipatti ,
× RELATED தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக...