பழநி, செப். 9: பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. பழநி பகுதியில் அதிகளவு மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. மக்காச்சோளத்தில் கடந்த சில வருடங்களாக படைப்புழு தாக்குதல் அதிகளவு உள்ளது. மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை முறைகள் குறித்து தொப்பம்பட்டி வேளாண்துறையினர் கூறியதாவது, நன்றாக உழவு செய்ய வேண்டும். கடைசி உழவில் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். 10 கிராம் பிவேரியா பேசியானாவுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
இனக்கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு 5 வைக்க வேண்டும். வரப்பு பயிராக சூரியகாந்தி, தட்டைப்பயிறு போன்றவை விதைக்க வேண்டும். ஊடு பயிராக பயறுவகை பயிர்கள் விதைக்க வேண்டும். வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த வேண்டும். பூச்சிக் கொல்லி தெளிக்க கைத்தெளிப்பான் பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு வேளாண் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு கூறினர்.
