×

பின் தங்கிய பகுதிகளில் மினி கிளினிக்குகள் திறக்க வில்லை: ஏமாற்றத்தில் கிராமமக்கள்

சாயல்குடி, டிச.17:  ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய போக்குவரத்து வசதி, முதலுதவி மருத்துவம் கூட கிடைக்காத பின்தங்கிய பகுதிகளில் மினி கிளினிக்குகளை திறக்க வில்லை. நகர பகுதியை யொட்டிய கிராமங்களில் திறக்கப்பட்டதால் பின்தங்கிய கிராமமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மினி கிளினிக் எனும் திட்டத்தை கடந்த 14ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்த மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் இடம் பெறுவார். காய்ச்சல், சளி, தலைவலி போன்ற எளிதாக சிகிச்சை அளிக்கக்கூடிய நோய்களுக்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படும்.

ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, ஹீமோகுளோபின், சிறுநீர் பரிசோதனை, இ.சி.ஜி, பல் ஆக்சிமீட்டர், வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட வசதிகள் இடம் பெறும். இங்கு காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி ராமநாதபுரம் சுகாதார மாவட்டத்தில் 30 கிளினிக்குகள், பரமக்குடி சுகாதார மாவட்டத்தில் 36 கிளினிக்குகள் என மாவட்டத்தில் மொத்தம் 66 கிளினிக்குகள் திறக்கப்படும் அறிவிக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக ராமநாதபுரம் சுகாதார மாட்டத்தில் வாலாந்தரவை, அரியான்குண்டு, காஞ்சிங்குடி, உப்பூர், சித்தூர் ஆகிய 5 இடங்களிலும், பரமக்குடி சுகாதார மாவட்டத்தில் கடலாடி அருகே எஸ்.மாரியூர், கமுதி அருகே பம்மனேந்தல், போகலூர் அருகே மௌந்தி, பரமக்குடி அருகே கமுதக்குடி ஆகிய 4 இடங்களில் அமைக்கப்பட்டது.

கிளினிக்குகள் அமைப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் விரைவாக செய்யப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்ததும் இம்மாதம் இறுதிக்குள் செயல்பட துவங்கும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியான கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய மூன்று தாலுகா பகுதியில் 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு தாலுகா மருத்துவமனைகள் மற்றும் ஒவ்வொரு தாலுகாவிலும் குறைந்தது மூன்றிற்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

அந்த மருத்துவமனைகளிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் தாலுகாவிற்கு தலா 10க்கும் மேற்பட்ட பெரிய கிராமங்கள், தலா 10க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. ஆனால் போதிய போக்குவரத்து வசதிகள் கிடையாது. இப்பகுதியினருக்கு அவசர மருத்துவ சிகிச்சைக்கு முதலுதவி கூட கிடைப்பதில்லை. முதலுதவி பெறுவதற்கு சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் தாலூகா தலைமையிட மருத்துவமனைக்கு வரவேண்டியுள்ளது. உயர்சிகிக்சை பெற சுமார் 100 கிலோ மீட்டருக்கும் மேல் உள்ள ராமநாதபுரம், மதுரை,தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த மருத்துவமனைகளுக்கு செல்வதற்குள்ளும், தாமதமாக கிடைக்கும் சிகிச்சையாலும் உறுப்புகள் செயலிழப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படுவது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் மாவட்டத்தில் கிராமங்கள் அதிகமுள்ள முதுகுளத்தூர், கடலாடி, கமுதி பகுதியில் கூடுதலான மினி கிளினிக்குகளை திறக்காதது பெரும் ஏமாற்றத்தை தருவதாக இப்பகுதி கிராமமக்கள் கூறுகின்றனர். எனவே மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய இப்பகுதியில் கூடுதலாக மினி கிளினிக்குகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : clinics ,areas ,
× RELATED டெல்லி அரசு மருத்துவமனைகள், மொகல்லா...