தஞ்சாவூர், செப். 9: பாபநாசம் வட்டம் சாத்தனூர் கிராமத்தில் உள்ள எடக்குடி – சாத்தனூர் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பால், தண்ணீர் கிடைக்காமல் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. அப்போது பாபநாசம் வட்டம் சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
சாத்தனூர் கிராமத்தில் எடக்குடி – சாத்தனூர் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த பாசன வாய்க்காலின் கிளை வாய்க்காலில் சுமார் 40 அடி நீளத்துக்கு தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் கீழ்பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை. சுமார் 10 ஏக்கர் பாசன நிலங்கள் தண்ணீர் இல்லாமல், சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாயிகள் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
