புதுக்கோட்டை, செப்.9: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே சேந்தன்குடியைச் சேர்ந்தவர் வேலு. இவருடைய மனைவி வள்ளியம்மை(70). அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் வள்ளியம்மை, கொத்தமங்கலம் கடைவீதியில் நேற்று முன்தினம் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிள் மோதியது. விபத்தில் காயம் அடைந்த வள்ளியம்மை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினமே உயிரிழந்தார்.
இந்நிலையில், வள்ளியம்மையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு செல்ல தாமதித்து வந்த கீரமங்கலம் போலீஸாரைக் கண்டித்து கீரமங்கலம் காவல் நிலையம் அருகே வள்ளியம்மையின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு, உரிய ஆவணங்களுடன் கீரமங்கலம் காவல் நிலையத்தில் இருந்து போலீஸார் புறப்பட்டு சென்ற பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
