×

இறந்த கோயில் காளைக்கு மேளம் தாளத்துடன் கிராமமக்கள் அஞ்சலி

சாயல்குடி, டிச.17:  கடலாடி அருகே தேவர்குறிச்சியில் சித்திரை மாதம் மதுரையில் நடக்கும் கள்ளழகர் திருவிழாவிற்காக அழகர் கோயிலுக்கு காளையை வைத்து திரி எடுத்து வருகின்றனர். 20 வருடங்களுக்கு முன்பு கிராமமக்கள் வளர்த்து வந்த காளை ஒன்றை அழகர்கோயில் மலையில் விட்டு விட்டு வந்துள்ளனர். ஆனால் அந்த காளை தேவர்குறிச்சி கிராமத்திற்கே திரும்பி வந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த காளைக்கு மலைச்சாமி என பெயரிட்டு கிராம மக்கள் வளர்த்து வந்துள்ளனர்.

வயது முப்பின் காரணமாக காளை நேற்று இறந்து போனது. இதனால் சோகத்தில் மூழ்கிய கிராமமக்கள் உறவினர்கள் இறந்தது போல் எண்ணி கண்ணீர் விட்டு அழுதனர். மாலை, மரியாதை செய்யப்பட்டு, அழகர் கோயில் வேஷமிட்டு விசேஷ பூஜைகள், அபிஷேகம் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க சித்தர் அடக்கம் முறையில் நல்லடக்கம் செய்தனர். கிராமமக்கள் கூறும்போது, அழகர்மலையில் விடப்பட்டு வந்த கோயில்காளை கிராமத்திற்கு திரும்பி வந்ததால், அதனை கிராமமக்கள் பயபக்தியுடன் வளர்த்து வந்தோம்.

ஆண்டுதோறும் இதனை வைத்தே திரி எடுத்து வந்தோம். ஒரு குழந்தையை வளர்ப்பது போல் கிராமமக்கள் ஒன்றுகூடி வளர்த்து வந்தோம். காளை இறந்து போனாலும், நெருக்கிய உறவினர் இறந்தது போன்ற இழப்பு உள்ளது. காளை சித்தர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் விரைவில் கோயில் கட்டப்பட்டு, ஆண்டுதோறும் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.

Tags :
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்