கீழக்கரை, டிச.17: ஊராட்சிகளுக்கு தமிழக அரசு நிதி வழங்க கோரி, ஊராட்சி தலைவர்கள் கோடாங்கி வேடமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழக்கரை அடுத்த திருப்புல்லாணி அருகே தாதனேந்தலில் வித்தியாசமான முறையில் கோடாங்கி வேடமிட்டு தமிழக அரசின் நிதி வழங்கக்கோரி, ஊராட்சி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோடாங்கி வேடமணிந்து ஊராட்சி தலைவர் கோகிலாவின் கணவர் ராஜேந்திரன் இருந்தார். உதவியாளர் வேடமிட்டவாறு ஊராட்சித் தலைவர் கணேஷ், லாந்தை ஊராட்சி தலைவர் கவிதா, பெருங்களூர் ஊராட்சி தலைவர் ஜோன்ஸ் மாலை கண்ணன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
ஊராட்சித் தலைவர்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோகிலா கூறியதாவது,‘‘ஊராட்சி நிர்வாகத்திற்கு கடந்த 10 மாதங்களாக ஏஎஸ், எப், சி, சிறப்பு நிதி வழங்காமல் உள்ளதால், மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை. கடன் வாங்கி அடிப்படை தேவைகளை நிறைவேற்றினாலும் அதற்கான தொகை இன்னும் ஊராட்சி கணக்கில் ஏற்றாமல் பல மாதங்களாக இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். இது குறித்து பல கவனிப்பு ஆர்ப்பாட்டம் செய்தும் நடவடிக்கை இல்லாததால், நவீன கோடாங்கி என்ற தலைப்பில் குறிகேட்கும் வகையில் ஊராட்சி தலைவர்கள் நடித்து வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிட உள்ளோம்’’ என்றார்.