×

நீர்த்தாவரங்கள் பிடியில் கொடைக்கானல் ஏரி போர்க்கால அடிப்படையில் அகற்ற கோரிக்கை

கொடைக்கானல், டிச. 17: கொடைக்கானல் ஏரி நீர்த்தாவரங்கள் ஆக்கிரமிப்பால் தனது அழகை இழந்து வருகிறது. இதை போர்க்கால அடிப்படையில் அகற்ற மாவட்ட, நகராட்சி நிர்வாகங்கள் முன்வர வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக கொடைக்கானலின் இதயம் போன்றது ஏரி. ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட இந்த நட்சத்திர வடிவிலான ஏரியில் படகு சவாரி செய்வது, ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள்- டூவீலர் ரைய்டிங் செய்வது, வாக்கிங் செல்வது என சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சுகமான அனுபவத்தை தருவதாகும்.

மேலும் இந்த ஏரி பழநி நகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பதுடன், கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான பெருமாள் மலை, பேத்துப்பாறை, அஞ்சுவீடு போன்ற ஊர்களின் பாசன வசதிக்கும் ஆதாரமாக விளங்குகிறது. 5 கிமீ சுற்றளவு கொண்ட இந்த ஏரி தற்போது நீர்த்தாவரங்களால் பாழ்பட்டு தனது பொலிவை இழந்து வருகிறது. முன்பு இதை அகற்ற நகராட்சி நிர்வாகம் சில பணியாளர்களை வைத்து சில மணிநேரம் மட்டுமே பணிகளை மேற்கொண்டது. ஆனால் கொரோனா ஊரடங்கால் ஏரியில் படகு சேவை நிறுத்தப்பட்டதால் தற்போது அப்பணிக்கும் வழியில்லாமல் போய் விட்டது.

சில நாட்களுக்கு முன்புதான் படகு சவாரி துவங்கிய நிலையில் தற்போது ஏரி முழுவதும் நீர்த்தாவரங்கள் ஆக்கிரமிப்பில் அகப்பட்டு கிடக்கிறது. இதை உடனடியாக அப்புறப்படுத்தாவிட்டால் ஏரியின் அழகு முற்றிலும் கெட்டு விடும் என அச்சம் தெரிவிக்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, ‘கொடைக்கானல் ஏரியின் பாதியளவிற்கு நீர்த்தாவரங்கள் ஆக்கிரமித்துள்ளன. குறைந்த ஆட்களை வைத்து சில மணிநேரம் மட்டும் பணிகளை நடத்தினால் இப்பணி நிறைவுபெற பல மாதங்கள் ஆகும்.

அதற்குள் இந்த நீர்த்தாவரங்கள் அகற்றிய பகுதிகளில் மீண்டும் முளைத்து வந்து விடும். எனவே கொடைக்கானல் மாவட்ட, நகராட்சி நிர்வாகங்கள் வல்லுனர்களின் ஆலோசனையை பெற்று போர்க்கால அடிப்படையில் நீர்த்தாவரங்களை முழுமையாக அகற்றி ஏரியை அழகுபடுத்த முன்வர வேண்டும். மேலும் கொடைக்கானல் நலன் சார்ந்த சமூகஆர்வலர்கள், தன்னார்வலர்களையும் இணைத்து கொண்டு இப்பணியை மேற்கொள்ளலாம்’ என்றனர்.

Tags : removal ,plants ,Kodaikanal Lake ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...