×

புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி ரத்த அழுத்தம் காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: டிஜிபி அலுவலகம் அருகே விசிக நிர்வாகிகளை கத்தியால் தாக்கிய வழக்கில் புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை போலீசார் கைது செய்தனர். திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்தம் காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி வந்தார். அப்போது அங்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளரான மயிலாப்பூர் ரூதர்புரம் பகுதியைச் சேர்ந்த முருகன், மயிலாப்பூர் பகுதி துணை செயலாளர் திலீபன்(எ) மகாதேவன், தென் சென்னை மாவட்ட செய்தி தொடர்பாளர் குமரப்பா, கட்சியின் உறுப்பினர் ஜாஹிர் உள்ளிட்ட 5 நபர்கள் திடீரென ஏர்போர்ட் மூர்த்தியை செருப்பால் அடித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ஏர்போர்ட் மூர்த்தி தான் வைத்திருந்த பாக்கெட் கத்தியால் விசிக நிர்வாகி திலீபன் என்பவரது கையில் கிழித்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு 16 தையல்கள் போடப்பட்டுள்ளது. இந்த மோதல் தொடர்பாக புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விசிக நிர்வாகி திலீபனும் ஏர்போர்ட் மூர்த்தி மீது மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இரு தரப்பு புகார்கள் தொடர்பாக, மெரினா போலீசார் புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி அளித்த புகாரின் பேரில் அவரை தாக்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திலீபன்(எ) மகாதேவன் அளித்த புகாரின் படி, புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் படி விசிக நிர்வாகிகளை கத்தியால் தாக்கியது உறுதியானதை தொடர்ந்து, ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் நேற்று இரவு பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். பின்னர் உடல் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது திடீரென ஏர்போர்ட் மூர்த்திக்கு ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து டாக்டர்கள் பரிந்துரைப்படி ஏர்போர்ட் மூர்த்தியை போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : Pratika Tamil Nadu Party ,Airport Murthy ,Stanley Hospital ,Chennai ,VKC ,DGP ,Stanley Government Hospital ,Tamil Nadu… ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...