×

முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் மழையால் நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்தது

*வன விலங்குகளின் குடிநீர் பற்றாக்குறை நீங்கியுள்ளது

ஊட்டி : முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக பெய்த மழை காரணமாக வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் வன விலங்குகளின் குடிநீர் பற்றாக்குறை நீங்கியுள்ளது.மூன்று மாநில எல்லையில் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

இங்கு புலிகள் மட்டுமின்றி யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு போன்ற பல்வேறு வகையான மான்கள் மற்றும் பல்வேறு வகை பறவைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இது தவிர தேக்கு மற்றும் ஈட்டி மரங்கள் அதிகளவு உள்ளன. இங்குள்ள வன விலங்குகளின் முக்கிய குடிநீர் ஆதாரம் மாயாறு ஆகும். மாயாற்றுக்கு அடுத்தபடியாக அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள கேம்ஹட், ஒம்பெட்டா ஏரிகள் உள்ளன.

இது தவிர புலிகள் காப்பக வனப்பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வரை முதுமலை வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் குறைந்த அளவிலான தண்ணீர் இருந்தது. கோடை மழை காரணமாக வறட்சி ஏற்படாமல் தப்பியது.

தொடர்ந்து மே இறுதி வாரத்தில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பந்தலூர், கூடலூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இந்த மழை காரணமாக முதுமலை வனப்பகுதியில் பசுமை திரும்பின. இடம்பெயர்ந்த வன விலங்குகளும் திரும்பின. மாயாற்றிலும் நீர் வரத்து உள்ளது. இதேபோல் கேம்ஹட், ஓம்பெட்டா ஏரி உட்பட சிறு குளங்கள், குட்டைகள் என அனைத்திலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் வன விலங்குகளின் குடிநீர் பற்றாக்குறை நீங்கியுள்ளது.

இது குறித்து முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் கூறுகையில், ‘‘மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் வரும் காலங்களில் வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுபாடு இருக்காது. வடகிழக்கு பருவமழையும் நன்கு பெய்யும் பட்சத்தில் நீர்நிலைகள் முழுமையாக நிரம்ப வாய்ப்புள்ளது’’ என்றனர்.

Tags : Mudumalai Tiger Reserve ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!