- சென்னை விமான நிலையம்
- மதுரை
- அமைச்சர்
- எம் சுப்பிரமணியன்
- சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்
- சென்னை
- யூனியன் சிவில் ஏவியேஷன்
- கிஞ்சாரப்பு ராம்மோகன் நாயுடு
சென்னை: ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று எழுதியுள்ள கடிதம்: சமீபகாலமாக சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரைக்கு செல்பவர்களுக்கு பெரிய அளவிலான மனஉளைச்சல் ஏற்படுகிறது. மதுரைக்கு செல்லும் ஏடிஆர் விமானங்களுக்கு செல்ல நெடுந்தூரம் பல கிமீ தொலைவு பேருந்தில் பயணிக்க வேண்டியுள்ளது. விமானத்தில் ஆகாய வழியே மதுரைக்கு பயணமாகும் நேரம் பேருந்தில் பயணிக்க ஆகிறதே என்கிற சலிப்பு ஒவ்வொரு பயணிக்கும் ஏற்படுகிறது. இப்பேருந்துகளில் இருக்கைகள் குறைவாகவே உள்ளதால் வயது மூத்தோரும் குழந்தைகளும் கூட நின்று பயணிக்கும் சங்கடமும் உள்ளது.
சென்னை விமான நிலைய 1301 ஏக்கர் நிலப்பரப்பின் சுற்றுச்சுவர் ஒட்டியுள்ள ஒட்டு மொத்த பாதையையும் கடந்து கடைகோடியில் விமானங்கள் நிறுத்தப்படுவதற்கான காரணம் பார்க்கிங் கட்டணம் குறைவு என்பதாக சொல்லப்படுகிறது. இதனால் பயணிகளுக்கு எந்த பயனும் இல்லை என்பதும் ‘கட்டணம்’ கட்டுக்குள் இல்லாதிருப்பது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. சென்னையிலிருந்து மதுரை, தூத்துக்குடி மற்றும் திருச்சிக்கு செல்ல ஏடிஆர் விமானங்களே இயக்கப்படுகிறது. அதிக அளவில் மக்கள் பயணிக்கும் இந்த ரூட்களில் ஏர்பஸ் விடுவதே சரியாக இருக்கும். எனவே மேற்கண்ட இப்பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.
