×

குலசேகரம் அருகே மலை உச்சியில் செல்பி எடுத்த போது 100 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர் இரவில் மலையில் தவித்தவர்களை வனத்துறையினர் மீட்டனர்

குலசேகரம், டிச. 17 : குலசேகரம்  அருகே உள்ள முகளியடி மலை உச்சியில் செல்பி எடுத்த போது பள்ளத்தில் விழுந்த வாலிபரை வனத்துறையினர் மீட்டனர்.  குமரி மாவட்டத்தில் உயர்ந்த  மலை சிகரங்களில் ஒன்று குலசேகரம் அருகே உள்ள முகளியடி மலைசிகரம் ஆகும்.  மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள இந்த மலை சிகரத்தின் உச்சியில் இயற்கை அழகு  கொட்டி கிடப்பதால், இயற்கை ஆர்வலர்களும், மலையேறுபவர்களும் அவ்வப்போது  அங்கு செல்வது உண்டு.   மேலும் இந்த மலை உச்சியில் இருந்து  பார்த்தால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை காண முடியும். இதனால்  ஏராளமானோர் அங்கு சென்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக  வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர். மேலும் கிறிஸ்துமஸ் காலத்தில்  குடில் அமைப்பதற்கான தருவை புற்கள் வெட்டவும் இந்த பகுதிக்கு இளைஞர்கள்  செல்கின்றனர். செங்குத்தான மலை மீது உள்ள இந்த மலைசிகரம் வனத்துறை கட்டுப்பாட்டில்  உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் குலசேகரம் அருகே உள்ள கோட்டூர்கோணம்  பகுதியை சேர்ந்த 6 பேர் 2 குழுவாக முகளியடி மலை சிகரத்தில் ஏற சென்றுள்ளனர். மலைசிகரத்தில்  உயரமான பகுதியில் ஏறிக்கொண்டிருந்தபோது ஆன்றோ மனோஜ் என்ற வாலிபர் தவறி  விழுந்துள்ளார். 100 அடி பள்ளத்தில் விழுந்த அவர் ஒரு பாறையில்  சிக்கிக்கொண்டார். அவருடன் சென்ற சுஜித், அருண் என்ற 2 பேரும் என்ன செய்வது  என தெரியாமல் அங்கேயே இருந்தனர். அப்போது அவர்களுடன் சென்ற மற்றொரு குழுவினர் இதை பார்த்து உடனடியாக திரும்பி வந்து ஊரில் உள்ளவர்களிடம்  தகவல் தெரிவித்தனர். அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து  மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில் வன ஊழியர்கள், பொதுமக்கள் சிலர்  முகளியடி மலை சிகரத்துக்கு சென்றனர். இரவு 8 மணியளவில் வாலிபர்கள்  இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர். பின்னர் அவர்களை போராடி பாதுகாப்பாக மீட்டனர்.  
இரவு நேரம் என்பதாலும், அவர்கள் அனைவரும் சோர்வடைந்து  காணப்பட்டதாலும்  இரவு முழுவதும் அங்குள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பில் தங்கினர். தொடர்ந்து நேற்று மதியம் 3 வாலிபர்களையும் அழைத்துக்கொண்டு குலசேகரம் வனச்சரக அலுவலம் வந்தனர்.  முதுகுதண்டில் காயம் அடைந்து இருந்த ஆன்றோ மனோஜ் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விசாரணையில் மலை உச்சியில் இருந்து செல்பி எடுத்த போது தவறி 100 பள்ளத்தில் விழுந்தது தெரியவந்தது.

Tags : Forest officials ,hill ,Kulasekara ,
× RELATED சேதமான சாலையில் ஆம்புலன்ஸ் வர...