×

பர்வதமலை கோயிலில் தனுர் மாத உற்சவம் கிரிவலம் சென்ற பக்தர்கள் தடுத்து நிறுத்தம்

கலசபாக்கம், டிச.17: கலசபாக்கம் அடுத்த பர்வதமலை கோயிலில் நேற்று தனுர் மாத உற்சவம் நடந்தது. இதையொட்டி, கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரமுள்ள பர்வதமலை மீது மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயில் மற்றும் கோயில்மாதிமங்கலம் கிராமத்தில் கரைகண்டேஸ்வரர் கோயில்களில் மார்கழி மாத பிறப்பையொட்டி தனுர் மாத உற்சவம் நடைபெறுவது வழக்கம்.மேலும், கரைகண்டீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கோயில்மாதிமங்கலம், கடலாடி, தென்மகாதேவ மங்கலம், பட்டியந்தல் உட்பட 12 கிராமங்கள் வழியாக 24 கிலோ மீட்டர் பர்வதமலையை கிரிவலம் வருவார். அப்போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியுடன் கிரிவலம் செல்வார்கள். அதன்படி, தனுர் மாத உற்சவத்தையொட்டி நேற்று அதிகாலை பர்வதமலை மற்றும் கோயில்மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கரைகண்டீஸ்வரர் சிறப்பு அலரங்காரத்தில் கோயில் பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். பக்தர்கள் கிரிவலம் மற்றும் மலையேறுவதை தடுக்கும் வகையில் கிரிவலப்பாதை, மலையேறும் வழிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
செங்கம்: மார்கழி மாத பிறப்பையொட்டி செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில், வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில், வீரசுந்தர ஆஞ்சநேயர் கோயில், காக்கங்கரை விநாயகர் கோயில்களில் நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Devotees ,festival ,Kiriwalam ,Tanur ,Parvathamalai ,
× RELATED தாய்லாந்தில் நடைபெற்ற பச்சை குத்தும் திருவிழா!!