×

கொரோனாவால் பலியானவரின் குடும்பத்துக்கு இழப்பீடு: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் 4 லட்சம் இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சி.வி.ஹரி கிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது. எனது தந்தை சி.வி.ராஜசேகர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். பேரிடர் மேலாண்மை சட்டபிரிவு 12 உட்பிரிவு 3  கீழ் பேரிடரால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளுக்கு குறைந்தபட்ச நிவாரணம் வழங்க வேண்டும். அதுகுறித்து மாநில அரசுகள் வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வராவிட்டால், மத்திய அரசின் குறைந்தபட்ச நிவாரணம் வழங்க கூடிய வழிகாட்டு நெறிமுறைகள் இந்த இழப்பீடுக்கு பொருந்தும்.

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 4 லட்சமும், ஒரு வாரம் சிகிச்சை பெற்றவர்களுக்கு ₹4,300, ஒரு வாரத்துக்கு மேல் சிகிச்சை பெறக் கூடியவர்களுக்கு 12,700 வழங்க வேண்டும் என்று மத்திய அரசின் 2016ம் ஆண்டைய விதிமுறைகள் உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் கொரோனா தொடர்பான பொதுநல வழக்கு விசாரணையின்போது, கொரோனா உயிரிழப்புகளுக்கும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, தனது தந்தையின் மரணத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதில் நீதிமன்றம் தலையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, மனுதாரர் வழக்கு குறித்து தமிழக அரசும், மத்திய அரசும் பிப்ரவரி 4ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

Tags : victim ,State ,iCourt ,Governments ,Central ,
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...