×

திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகர் கூட்ரோட்டில் புதிய சாலையில் வேகத்தடை அமைக்காததால் அடிக்கடி விபத்து: அதிகாரிகளின் அலட்சிய போக்கு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகர் கூட்டுரோட்டில் வேகத்தடை, உயர்கோபுர மின் விளக்குகள், வழிகாட்டி பலகைகள் இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். திருக்கழுக்குன்றத்தில்  ஆசிரியர் நகர் கூட்டு ரோட்டில் செங்கல்பட்டு, மாமல்லபுரம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு 3 சாலைகள் பிரிகின்றன. 3 சாலைகள் சந்திக்கும் இடத்தில்  வாகன போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.  இப்பகுதியில் சமீபத்தில் புதிதாக  சாலை அமைக்கப்பட்டது. ஆனால், முறையாக வேகத்தடை இல்லை. ஒரு சில இடங்களில் மட்டும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த ஊருக்கு எந்த திசையில் செல்ல வேண்டும் என்ற வழிகாட்டி பலகைகள் இல்லை. இதனால், வாகன ஓட்டிகள் குழம்பி தவிக்கின்றனர்.

குறிப்பாக, இப்பகுதியில், மின்விளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வரும் வாகனங்கள், இருள் சூழ்ந்து காணப்படுவதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், விபத்து ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. ஆசிரியர் நகர் கூட்ரோடு பகுதியில் வேகத்தடை, வழிகாட்டி பலகை, மின்விளக்கு அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆசிரியர் நகர் கூட்டுரோடு பைபாஸ் சாலையில், சம்பந்தமில்லாத இடத்தில் வேகத்தடை அமைத்து விட்டு, தேவையான இடத்தில் அமைக்கவில்லை.

உயர்கோபுர மின்விளக்கு வசதி இல்லாததால், சில மாதங்களுக்கு முன் வேகமாக வந்த ஒரு கார், அங்குள்ள புளிய மரத்தில் மோதி 3 பேர் இறந்தனர். இதற்கு, முறையாக வேகத்தடை, மின்விளக்கு அமைக்காததே காரணம். எனவே,  ஆசிரியர் நகர் கூட்ரோடு பகுதியில் உடனடியாக தேவையான இடத்தில் வேகத்தடை, மையப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு, வழிகாட்டி பலகை ஆகியவை அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : accident ,road ,teacher ,Thirukkalukkunram ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...