நரிக்குடியில் இடிந்து விழும் அபாயத்தில் கிராம நிர்வாக அலுவலகங்கள்: வாடகை அறை பிடித்து வேலை பார்க்கும் விஏஓ.க்கள்

திருச்சுழி, டிச.16:  திருச்சுழி, நரிக்குடி பகுதியில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்கள் பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் விஏஓ.க்கள் வாடகை அறை பிடித்து வேலை பார்க்க வேண்டிய அவல நிலை நிலவுகிறது. திருச்சுழி, நரிக்குடி பகுதியில் உள்ள ஏராளமான கிராம நிர்வாக அலுவலகங்கள் பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் கிராம நிர்வாக அதிகாரிகள் அலுவலகத்தில் பணிபுரிய முடியாமல் நரிக்குடி மற்றும் திருச்சுழி, ம.ரெட்டியபட்டியில் உள்ள வாடகை கட்டிடத்தில் தங்கி பணிபுரிகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள பொது மக்கள் கிராம நிர்வாக அதிகாரிகளை தேடி அலைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஒவ்வொரு ஊராட்சிகளிலும் கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டும் சரிவர பராமரிக்கப்படவில்லை. எனவே கட்டிடம் முழுமையாக சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாததால் தனியார் கட்டிடத்தில் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.  சில இடங்களில் மாடியில் வாடகைக்கு அறை பிடித்து அங்கு தங்கி பணி செய்கின்றனர். இதனால் முதியோர்கள் மாடிபடி ஏற முடியாமல் அவதிப்படுகின்றனர். கிராம நிர்வாக அலுவலரை காண வேண்டுமென்றால் குறைந்தது 50 ரூபாய் செலவு செய்து செல்ல வேண்டியுள்ளது.

பொதுமக்கள் அவ்வாறு செல்லும் நேரத்தில் அலுவலர் கட்டிடத்தில் இருப்பதில்லை. இதனால் பொதுமக்கள் விரக்தி அடைகின்றனர். எனவே சேதமடைந்த கட்டிடத்தை சீரமைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் தினந்தோறும் கிராமத்திற்கு வரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: