×

சண்முகாநதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: 1,640 ஏக்கர் பயன்பெறும்

உத்தமபாளையம், டிச. 16: ராயப்பன்பட்டி சண்முகாநதி அணையில் இருந்து 1,640 ஏக்கர் புன்செய் நிலங்களின் பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளதாக்கில் முக்கியமான நீர்தேக்கமாக உள்ளது சண்முகாநதி. மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த உயரம் 52.5 அடியாகும். இங்கு தண்ணீர் திறக்கப்பட்டால் ராயப்பன்பட்டி, மல்லிங்காபுரம்,  ஓடைப்பட்டி, சீப்பாலகோட்டை, ஆனைமலையன்பட்டி, எரசை, சின்னஓவுலாபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊர்களின் 1,640 ஏக்கர் புன்செய் நிலங்கள் பாசன வசதி பெறும்.

கடந்த நவம்பரில் அணை நீர்மட்டம் உயர்ந்து, முழு கொள்ளளவை எட்டியது. அப்போது முதலே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தற்போது அணை நிரம்பி பெரியாற்றில் தண்ணீர் கலந்ததால், உடனடியாக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சண்முகாநதியில் வரும் 15ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று காலை அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை வகித்தார். தேனி தொகுதி எம்பி.ரவீந்திரநாத் மதகினை திறந்தார். இதில் உதவி பொறியாளர் கதிரேஷ்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் கூறுகையில், ‘அணையில் இருந்து விநாடிக்கு 14.47 கனஅடி வீதம் 50 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். இதனை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்றார்.

Tags : Opening ,Shanmuganathi Dam ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு