×

ஓணம் பண்டிகை: செல்வப்பெருந்தகை, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!!

சென்னை: கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை நாளை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்;

உலகெங்கிலும் உள்ள மலையாளப் பெருமக்கள் எவ்வித மொழி, மத, ஜாதி, இன வேறுபாடின்றி கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். தமிழகத்தில் மலையாள மொழியை தாய்மொழியாகக் கொண்ட லட்சக்கணக்கான மக்கள் பல சிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்தி மிகச் சிறப்பான வகையில் பணியாற்றி வருகின்றனர். மொழி ரீதியாக எந்த வேறுபாடும் இல்லாமல் சமத்துவம், சகோதர உணர்வு, மத நல்லிணக்கம் ஆகியவற்றை கடைபிடித்து, சமூக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மேற்கொள்கிற முயற்சிகளில் வெற்றி பெற்று சிறப்புடன் வாழ்ந்து வருவது மிகவும் பாராட்டுக்குரியதாகும்.

ஓணம் திருநாள் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இவ்விழாவின் நிறைவில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, சகோதரத்துவத்தை நடைமுறைப்படுத்துகிற வகையில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, எவ்வித வேறுபாடுமின்றி பண்பாடு, கலாச்சாரத்தை தனித்தன்மையுடன் காப்பாற்றி, சமூக நல்லிணக்கத்தோடு தமிழகத்தில் வாழ்ந்து வருகிற மலையாள பெருமக்கள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்;

திருஓணம் திருநாளை வசந்த கால விழாவாக உவகையுடன் கொண்டாடி மகிழும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ‘ஓணம்’ திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். திருமால் வாமன அவதாரம் பூண்டு மாபலிச் சக்கரவர்த்தியை அடக்கி, பின்னர் அம்மன்னன் வேண்டிய வண்ணம் மக்கள் அனைவரும் எப்போதும் சுபிட்சமாக இருக்கவும், அவர்களை ஆண்டுதோறும் காண வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் ஏற்று அருள் புரிந்தார். அதன்படி, மாபலிச் சக்கரவர்த்தி மக்களைக் காண வரும் நன்நாளே திருவோணம் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது, மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் வீடுகளின் முன்புறம் அரிசி மாவினால் கோலமிட்டு, அதனை வண்ணப் பூக்கள் கொண்டு அலங்கரித்து, நடுவே குத்துவிளக்கேற்றி, புத்தாடை உடுத்தி, அறுசுவை உணவு உண்டு, ஆடல், பாடல், விளையாட்டுகளுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவர்.

திருவோணத் திருநாளான இந்த நன்னாளில், இல்லந்தோறும் அன்பும், அமைதியும் நிலவட்டும்; மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும் என்று மனதார வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில், அனைவருக்கும் எனது இதயங்கனிந்த “ஓணம்” திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்குகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்;

மக்களின் நினைவாகவே வாழ்ந்த மன்னன் மகாபலியின் நினைவாக திருவோணம் திருநாளை கொண்டாடும், உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மன்னன் மகாபலியின் வாழ்க்கை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு ஆகும்.

பாதாள உலகத்தில் இருந்து மகாபலி ஆண்டுக்கு ஒருமுறை மக்களைக் காண வரும் நாளே திருவோணம் திருநாளாக உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களால் மிக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கடவுளின் பூமி என்றும், இயற்கையின் சொர்க்கம் என்றும் போற்றப்படும் கேரளம் வளம் கொழிக்க வேண்டும்; கேரள மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

ஓணம் திருநாள் மக்களுக்கு சொல்லும் செய்தியும் அதுதான். அந்த செய்தியை மதித்து, ஓணம் திருநாளைப் போலவே எல்லா நாட்களிலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் வேண்டும் என்று வேண்டி திருவோணம் கொண்டாடும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Onam festival ,Selvapperunthakai ,Edappadi Palaniswami ,Chennai ,Kerala ,Tamil Nadu Congress Committee ,President ,AIADMK ,General Secretary ,Anbumani Ramadoss ,Tamil Nadu Congress Committee… ,
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்சமாக...