×

இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு

 

இங்கிலாந்து: இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சந்திதத்தார். பல்வேறு துறைகளில் தமிழ்நாடு-இங்கிலாந்து ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 3.9.2025 அன்று TN RISING ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டத்தில், இங்கிலாந்து நாட்டின், இலண்டன் நகரில் உள்ள வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில், இங்கிலாந்து அமைச்சர், நாடாளுமன்ற துணை செயலாளர் (இந்தோ-பசிபிக்) கேத்தரின் வெஸ்ட் அவர்களை சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழ்நாடு-இங்கிலாந்து ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, இந்தோ-பசிபிக் பகுதிகளில் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், பசுமைப் பொருளாதாரத் தலைமை, கல்வி, ஆராய்ச்சி மற்றும் மீள்தன்மை கொண்ட கடல்சார் இணைப்பு போன்ற துறைகளில் தமிழகத்தின் பங்கினையும், மின்சார இயக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஐடி சேவைகள் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் தமிழ்நாட்டின் வலிமையையும் எடுத்துரைத்தார். மேலும், வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டாண்மை மூலம் இந்தத் துறைகளில் அதிக அளவிலான இங்கிலாந்து நாட்டின் பங்களிப்பையும் கோரினார்.

உயர்கல்வி, திறன் மேம்பாடு மற்றும் காலநிலை ஒத்துழைப்பில் இங்கிலாந்து-தமிழ்நாடு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பசுமை ஹைட்ரஜன், சூரிய சக்தி மற்றும் காற்றாலை ஆற்றல் ஆகியவற்றில் உலகளாவிய அளவில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்துக் கூறினார். மேலும், காலநிலை மாற்ற உத்திகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதித்தனர்.

கலாச்சார மற்றும் புலம்பெயர் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும், தமிழ்நாட்டின் கடலோர நிலையைப் பயன்படுத்தி கடல்சார் ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.  இச்சந்திப்பு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இங்கிலாந்து பயணத்திற்கு மேலும் வலு சேர்க்கும். ஏனெனில், ஏற்கனவே விண்வெளி, கடல்சார் நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்கவை, ஜவுளி மற்றும் வடிவமைப்பு கல்வி ஆகியவற்றில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பு. உமாநாத், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : UK ,Minister ,Catherine West ,Tamil Nadu ,Chief Minister ,K. Stalin ,MLA K. Stalin ,Chief Minister of ,TN ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...