×

பெண்ணை கொன்ற தந்தை, மகன்களுக்கு ஆயுள் தேனி மகளிர் கோர்ட் உத்தரவு

தேனி, டிச. 16: பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பெரியமுருகன் (40). அதே பகுதியை சேர்ந்தவர் மொக்கை (52). இவரது மகன்கள் முத்து (30), உதயகுமார் (23). பெரியமுருகன், மொக்கை குடும்பங்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 2012ம் ஆண்டு நவ.15ல் இரு குடும்பங்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மொக்கை, உதயகுமார், முத்து ஆகியோர் பெரியமுருகனை அரிவாளால் வெட்டினர். இதனை தடுத்த பெரியமுருகன் மனைவி லட்சுமி, மகள் பூங்கொடி, தாய் ராமாயி படுகாயமடைந்தனர். இதில் ராமாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் கொலை, கொலை முயற்சி என இரு பிரிவுகளில் வழக்குப்பதிந்து மொக்கை, உதயகுமார், முத்துவை கைது செய்தனர். இவ்வழக்கு தேனி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராஜேஸ்வரி ஆஜராயினார். இவ்வழக்கின் விசாரணை முடிந்ததையடுத்து நேற்று நீதிபதி வெங்கடேசன் தீர்ப்பளித்தார். குற்றம்சாட்டடுகள் நிரூபிக்கப்பட்டதால் மொக்கை, உதயகுமார், முத்து ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

 அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் கொலை முயற்சி வழக்கில்  மூவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் . இதில் பாதிக்கப்பட்ட லட்சுமிக்கு குற்றவாளிகள் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.60 ஆயிரத்தை வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பளித்தார்.  இந்த தண்டனை காலத்தை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

Tags : sons ,Life Theni Women's Court ,
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்...