×

8 மாதங்களுக்கு பிறகு திருமலை நாயக்கர் மகால் இன்று திறப்பு

மதுரை, டிச.16: எட்டு மாதங்களுக்கு பிறகு மதுரை திருமலை நாயக்கர் மகால் இன்று திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
 கொரோனா தொற்று எதிரொலியாக கடந்த மார்ச் துவக்கத்தில் திருமலை நாயக்கர் மகால் மூடப்பட்டது. எனினும் இக்காலங்களில் ரூ.3.5 கோடி செலவில் தூண்களுக்கு வண்ணப்பூச்சு, பழமை முறைப்படி மேல் தரைத்தளம் சீரமைப்பு, புறாக்களின் எச்சம் தவிர்த்திட வலை அமைப்பு உள்ளிட்ட பணிகள் நடந்தன. தற்போது சீரமைப்பு பணிகள் முடிந்து ‘பளிச்’சென மாறியுள்ள மகாலில், சுற்றுலா பயணிகள் இன்று முதல் அனுமதிக்கப்படுகின்றனர்.
 
இதுகுறித்து தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் கூறும்போது, ‘‘டிச.16 முதல் சுற்றுலா பயணிகளுக்காக மகால் திறக்கப்படுகிறது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறுவருக்கு ரூ.5, பெரியவருக்கு ரூ.10 கட்டணத்தில் பார்வையிடலாம். தூண்களில் கிறுக்கினால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளி காக்க வேண்டும்.

 கிருமிநாசினி வழங்கப்படும். 65 வயது முதியவர்களுக்கு, 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கர்ப்பிணிகளுக்கு அனுமதியில்லை’’ என்றார்.     மதுரை மகாலில் வழக்கம்போல் மாலை 6.45 மணிக்கு ஆங்கிலத்திலும், இரவு 8மணிக்கு தமிழிலும் ஒலிஒளிக்காட்சியும் இன்று முதல் நடத்தப்படுகிறது.

Tags : Thirumalai Nayakkar Mahal ,
× RELATED திருமலை நாயக்கர் மகாலில் பறவைகள் நுழைவதை தடுக்க நைலான் வலை