×

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்: போலீசார் கைது செய்ய முயன்றதால் பரபரப்பு

மதுரை, டிச.16: வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி மதுரையில் நேற்று 2வது நாளாக விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மதுரையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் நேற்று முன்தினம் மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்டு திருவள்ளுவர் சிலை அருகே காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் முதல் நாள் கைது செய்தனர்.  

  இதே குழுவினர் நேற்று 2ம் நாளாக அதே இடத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தை மதுரை எம்.பி. வெங்கடேசன் துவக்கி வைத்தார். இதில், மதிமுக மாநகர செயலாளர் பூமிநாதன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர்கள் விஜயராஜன், ராமகிருஷ்ணன், மகளிரணி செயலாளர் பொன்னுத்தாய், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் காளிதாஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரவீந்திரன், சிபிஐ(எம்எல்) மாவட்ட செயலாளர் மதிவாணன், தொழிற்சங்க நிர்வாகி மகபூப்ஜான் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது எம்.பி. சு.வெங்கடேசன், ‘போராட்டம் நடத்த பல மாவட்டங்களில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் அதை மீறக்கூடாது’ என கோரினார். பின்பு உயர் போலீஸ் அதிகாரிகளிடம் எம்.பி. பேசினார். இதனைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் மாலை 5 மணி வரை அதே இடத்தில் நடந்தது. இந்த போராட்டத்தில்  பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : protest ,arrests ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...