×

9 மாதங்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி சுற்றுலா பயணிகள் உற்சாகம்

குலசேகரம், டிச.16: திற்பரப்பு  அருவியில் 9 மாதங்களுக்கு பின், நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமாக திற்பரப்பு அருவி விளங்குகிறது. மேற்கு  தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும்  கோதையாறு இங்கு அருவியாக விழுவதால் சீசன் காலம் என்றில்லாமல் ஆண்டின் எல்லா  நாட்களும் தண்ணீர் கொட்டும். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் இன்றி குளித்து செல்வார்கள்.

கொரோனா  பரவல் காரணமாக கடந்த மார்ச்  மாதம் சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் திற்பரப்பு   அருவியும் மூடப்பட்டது. பயணிகள் அருவிக்கு ெசல்வது  முற்றிலும்  தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு படிப்படியாக  தளர்த்தப்பட்டு  வருவதாலும், வாகன போக்குவரத்து தொடங்கியதாலும் சுற்றுலா பயணிகள்  மீண்டும்  திற்பரப்பு அருவிக்கு வர தொடங்கினர். ஆனால் குளிக்க அனுமதிக்கப்படாததால்,  ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கடந்த 3  மாதமாக இதே நிலை தான் இருந்து  வருகிறது.  இதனால் குளிப்பதற்காக ஆர்வத்துடன் வரும் சுற்றுலா  பயணிகள்  திற்பரப்பு தடுப்பணையில் வழிந்து வரும் தண்ணீரில் கூட்டம்  கூட்டமாக  குளித்து சென்றனர். இதனால் திற்பரப்பு அருவியில் பயணிகள் குளிக்க  அனுமதிக்க  வேண்டும் என்ற ேகாரிக்கை எழுந்தது.

இந்நிலையில் தமிழக  அரசு  சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் வழிமுறைகளை அறிவித்து சுற்றுலா பயணிகளுக்கு  அனுமதி அளித்தது. இதையடுத்து குமரி மாவட்ட  கலெக்டர் திற்பரப்பு அருவியில் நேற்று முதல் சுற்றுலா பயணிகள்  குளிக்க  அனுமதிக்கப்படுவார்கள் என நேற்று முன்தினம் அறிவித்தார். இதன்படி நேற்று காலை 6 மணி  முதல்  பேரூராட்சி நிர்வாகம் சார்பில் திற்பரப்பு அருவி பயணிகள்   குளிப்பதற்காக திறந்து விடப்பட்டது. ஆனால் தடை நீக்கப்பட்ட தகவல் முழுமையாக அனைவருக்கும் சென்றடையவில்லை. இதனால்  குறைந்த எண்ணிக்கையில் தான் நேற்று காலை சுற்றுலா பயணிகளை காண முடிந்தது.

இங்கு  வரும் சுற்றுலா பயணிகளுக்கு கைகளை சுத்தம் செய்ய பேரூராட்சி சார்பில்  அருவி நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள்  சமூக இடைவெளியில் குளிக்கவும், மற்ற நேரங்களில் முக கவசம் அணியவும்  அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் நுழைவு  கட்டணம், வாகனம்  நிறுத்த கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும்  பேரூராட்சி ஊழியர்களே  வசூலிக்கின்றனர். 9 மாதங்களுக்கு பிறகு திற்பரப்பு  அருவியில் பயணிகள்  குளிக்க அனுமதிக்கப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

Tags : Tirprappu Falls ,
× RELATED திற்பரப்பு அருவியில் 9 மாதங்களுக்கு...